Friday, December 21, 2012

21-12-2012 : "பிரபஞ்ச அஸ்தமனம்".

முழிப்பு வந்து கடிகாரத்தை பார்க்கையில் மணி 5.40. வேகவேகமாக வந்து டிவியை ஆன் செய்து, ரிமோட்டை தட்டுகையில் ஒரு வித பயம் கலந்த படபடப்பு....

0,1,2,3...... 99               98,97,96....... 3,2,1,0. ம்... ஒன்னுலியும் ஒன்னும் காணோம்.... டிவியை மியூட்டில் போட்டுவிட்டு வ‌ந்து ப‌டுத்துவிட்டேன்...


இப்ப‌திவை எழுதும் நேர‌ம் இர‌வு 7.47. வ‌ர‌லாற்றில் இட‌ம்பெற‌க்கூடிய‌ எந்த‌வித‌ நிகழ்வும் இன்றைய‌ மீதி பொழுதினில் ந‌ட‌ந்துவிட‌க்கூடிய‌ சாத்திய‌க்கூறுக‌ள் மிக‌ மிக‌ குறைவே...

21-DEC-2012. பிர‌பஞ்சம் அழிந்து கொண்டிருக்கிறது..... கடைசி பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இதோ கொள்ளைபுறமாக வேகமெடுத்து வந்துகொண்டிருக்கும் சூறைக்காற்....... என்று நிறைவுசெய்யமுடியாத பதிவை  எழுத முடியாத‌ சோகத்தோடு இந்த பதிவு நிறைவுசெய்யப்படுகிறது...


***************************************************

‎21-DEC-2012 : ANOTHER DAY ANOTHER DOLLAR???

21-DEC-2012 : மற்றுமொரு (அ)சாதாரண நாள்???

***************************************************

Tuesday, December 18, 2012

கவுஜ‌...


முத்தமிட முயற்ச்சிக்கும் செடிகளுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை இடையிலிருக்கும் சுவற்றின் வரலாறு...





Wednesday, December 12, 2012

இந்த நாள்....

12.12.12.

 
ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே தட்டுப்படும் தேதி. இந்த தேதியில் ஒரு நல்ல தகவலை பதிவு செய்ய வேண்டும் என்று காலையில் இருந்து மண்டையை குடைந்தும் ஒன்றும் கிட்டவில்லை...

சரி, இந்த பதிவை 12.12.(21)12 அன்று படிக்க நானும்/நீங்களும் இருக்கப்போவதில்லை..


‌வரலாற்று சிறப்பு மிக்க இந்த தேதியையும் இந்த பதிவையும்(?) வருங்கால சந்ததிகள் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய சமுதாய(?) நோக்கோடு இந்த பதிவு....   





Sunday, December 9, 2012

ந.கொ.ப.கா

"டுவுல கொஞ்சம் க்கத்த காணோம்"...

"லொல்லு தாதா பராக்" போலவே மற்றுமொரு படம் என்றளவில் நினைக்கப்பட்டிருந்த எண்ணத்தை படத்தை பற்றி கேட்ட/படித்த விமர்சனங்களும் மாற்றியுள்ளது...

இசை வெளியீட்டில் கமல் கலந்து கொண்டபோது "கட்டாயத்தின் பேரில் கமல் கலந்து கொண்டிருப்பார் போலும்" என்றே நினைத்துக்கொண்டிருந்த நமக்கு(?) இயக்குனர் பாலாஜி தரணிதரன் சந்தோஷ அதிர்வை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்...


******************************************************

சரியாய் மூன்று வருடங்களுக்கு முன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகருக்கு அருகில் நார்த் வேல்ஸ் கவுண்டியில்

உள்ள டென்னிஸ் மைதானத்தில் லைட் வெளிச்சம் சற்றே கம்மியாக தெரியும் மூன்றாம் கோர்ட்டின் வலப்பக்கம் நான் மற்றும் நண்பர் பழனி. இடப்பக்கம் நண்பர்கள் விவேக் மற்றும் சிவா.


வழக்கம் போல நமது ஆட்டத்திறனை(?) வெளிப்படுத்திக்கொண்டிருந்த எங்களுக்கு வந்தது ஒரு சோதனை(???)....


வாட்டமாய் வந்த பந்தை எதிர்புற‌ம் திருப்ப, திருப்பி அடிக்கும் அவசரத்தில் விவேக்கும் சிவாவும் பக்கவாட்டிலிருந்து ஓடிவந்து ஒருவர் தோள் ஒருவர் இடித்துக்கொள்ள.....

"டென்னிஸ் விளையாடிக்கிட்டு இருந்தோம்... யோகேஷ் அடிச்சாரு.... திருப்பி அடிக்க‌ற‌த்துக்கு வேக‌மா ஓடி வ‌ந்தனா? ம‌று ப‌க்க‌த்தில‌ருந்து சிவாவும் ஓடி வ‌ந்தானா? ரெண்டுபேரும் வேக‌மா மோதிக்கிட்டோமா... நா கீழவிழுந்திட்டேனா....... வ‌ல‌க்கை ம‌ணிக்க‌ட்டுல‌ அடிப‌ட்டுடிச்சி...... ரெண்டு வாரத்துல‌ சரியாயிடும்....." ராத்திரி சாப்பாட்டை கொண்டுவ‌ந்த ராக‌வ‌னிட‌ம் மான்ட்கொமரி ஆஸ்பிடல் பெட்டில் ஒருக்களித்து படுத்தபடி சொல்லிக்கொண்டிருந்தார் விவேக்....


விபத்துக்கு காரணகர்தாவாகிய(பந்தை நீதான் அடித்த என்று நானும், இல்ல நீதான் என்று பழனியும் ஒருவரை ஒருவர் இன்றுவரை சண்டையிட்டுக்கொள்வதுண்டு...) எங்கள் மூவர் குழு, விவேக்கின் கை சரியாகும் வரை அவரை கவனித்துக் கொள்வதாய் முடிவு செய்து, ஒரு வாரம் அக்ரிமென்ட்படி சரியாய் கவனித்துக்கொண்டு,பின்னர்பழனியின் வீட்டில் விவேக்கை விட்டுவிட்டு (தலையில் கட்டிவிட்டு!..) நானும் சிவாவும் எஸ்ஸாகிவிட‌ அடுத்த‌ மூணு வார‌த்துக்கு விவேக்கிர்க்கு நர்ஸ் வேலை பார்த்து எங்க‌ள் மேல் கொலை வெறியோடு அலைந்தார்....

சம்ப‌‌வம்(?) ந‌ட‌ந்த‌ ச‌ம‌ய‌ம் விவேக்கின் ம‌னைவி க‌ர்ப்ப‌வ‌தி... பிர‌ச‌வ‌த்திற்க்காக‌ இந்தியா சென்றிருந்த‌வ‌ரிட‌ம் அடிப‌ட்ட‌ விச‌ய‌ம் தெரியாம‌ல் மெயிட்டெயின் ப‌ண்ணுவ‌த‌ற்க்கு விவேக் ப‌ட்ட‌ அவ‌ஸ்தை இருக்குதே....... இப்ப‌ நென‌ச்சாலும் சிப்பு சிப்பா வ‌ருது....

******************************************************

நேற்றிர‌வு "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" ப‌ட‌ம் பார்கையில் விவேக்கை வைத்து நாங்க‌ள் பண்ணுன‌ காமெடியெல்லாம் ஞாபகம் வரவே, மேற்கண்ட கொசுவத்தி சுருள்...

படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள்...


தனது நண்பரின் கதையை அவரையே கேமராமேனாக வைத்து படம் எடுத்தது... நண்பனின் பெயரையே ( இனிசியல் உள்பட) ஷீரோவுக்கு வைத்தது... ப‌ட‌த்தின் இறுதியில் த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளை ப‌ற்றியும், அவ‌ர்க‌ளின் ல‌ட்சிய‌ங்க‌ள் ப‌ற்றியும் விவரித்தது.... ந‌டுத்த‌ர‌ குடும்ப‌த்து வாழ்க்கையை மிகையில்லாம‌ல் காட்சிப‌டுத்திய‌து...வ‌ச‌ன‌ங்க‌ளில் எதார்த்த‌த்தை பிர‌திப‌லித்த‌து... {{ந‌ண்ப‌னின் பிர‌ச்சினைக்கு அடுத்த‌வ‌ரை குற்ற‌ம் சொல்லாம‌ல், "என்னாலாதான் இப்ப‌டி ஆயிடுச்சி" என்று ஒவ்வொருவ‌ரும் த‌ன்னைத்தானே குறை சொல்லிக்கொள்வ‌தாக‌ட்டும்.}} .இருக்கிற‌ குழப்ப‌தையெல்லாம் தாண்டி ஹீரோவின் திரும‌ண‌ம் ந‌ட‌க்க‌வேண்டுமே என்ற‌ ப‌ட‌ப‌ட‌ப்பை ஹீரோவின் மூன்று ந‌ண்பர்க‌ளோடு சேர்த்து நம்மையும் அனுப‌விக்கவைக்கிற‌ லாவ‌க‌மாகட்டும்....ஒவ்வோன்றிலும் வ‌சீக‌ரிக்கிறார் பாலாஜி...


"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" -

"ந‌டுவுல‌ ந‌டுவுல‌ இந்த‌ மாதிரி ப‌ட‌ங்க‌ளும் எடுங்க‌ப்பா!" என்று கோட‌ம்பாக்க‌ம் நோக்கி கோட‌ங்கி சொல்கிற‌ பட‌ம்...









Sunday, September 25, 2011

கிறுக்கல்கள் : 25-09-2011


எங்கேயும் எப்போதும்.

எங்கே நடந்தாலும் எப்போதும்போல நாம் கடந்துபோகும் வாகன விபத்தை மைய்யப்படுத்தி திரைக்கதை அமைத்ததற்க்கு இயக்குனர் சரவணனை பாராட்ட வேண்டும்.

A.R.முருகதாஸ்/ஃபாக்ஸ் ஸ்டூடியோ தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கிய படம் என்று மட்டும் நினைத்திருந்த நான் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில்
தற்செயலாக இயக்குனர் சரவணனை பார்க்க சற்றே இன்ப அதிர்ச்சி... அட நம்ம சரவணன்....

சற்றே பின்னோக்கி 2003ம் வருடத்திற்க்கு....

சென்னை அசோக் நகர் - 7வது அவென்யூ: நடன இயக்குனர் லலிதா-மணி தம்பதியருக்கு சொந்தமான அபார்ட்மெண்ட் முதல் தளம். A.R.முருகதாஸ் அஜீத்தை வைத்து இயக்கும் புதுப்படத்திற்கான கதை விவாதம் நடந்துகொண்டிருந்த சமயம். நான் வேலை பார்த்த கம்பெனி 2வது மாடியில். A.R.முருகதாஸின் அசிஸ்டெண்டுகளில் சரவணன் ஜூனியர். எப்போதும் சாந்த சொரூபியாய் அலுவலக வரவேற்பரையில் அமர்ந்திருப்பார். கடந்துபோகும் எங்கள் அலுவலக சகாக்களைப்பார்த்து ஒரு பரிச்சய புன்னகை...

எங்கள் அலுவலகம் மைலாப்பூர் பகுதிக்கு மாற்றப்பட, பிரிதொரு சந்தர்ப்பத்தில் A.R.முருகதாஸின் மற்றுமொரு அசிஸ்டெண்ட் டைரக்டரை சந்திக்கையில் அஜீத்தை வைத்து இயக்க திட்டமிடப்பட்ட படம் டிராப் ஆகிவிட்டதாகவும், அலுவலகத்தையும் மாற்றிவிட்டதாகவும்
தெரிவித்தார்.

எட்டு வருடத்திற்கு பிறகு அவரிடமிருந்து இதுபோன்றதொரு படம் உருவாகும் என்று முருகதாஸ் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை...


படத்தில் பல காட்சிகள், வசனங்கள் நச்.

குறிப்பாக,

ஜெய் பயணம் செய்யும் பேருந்து பழுதடைந்துவிட, சரி செய்தபின் கண்டக்டருக்கு கை கழுவ ஜெய் உதவும் காட்சி(பேருந்து பழுதடைந்தால் உடனே இறங்கி ஜிப்பை கழட்டிக்கொண்டே புளியமரத்தை தேடும் நமக்கு அந்த காட்சி சற்றே வித்தியாசம்).

அனன்யாவின் அக்கா பேசும் வசனம் ”இதயே என் வீட்டுக்காரு செய்திருந்தாருன்னா இன்னும் பதினைந்து வருசத்துக்கு ‘ஒன்னொட சித்திப்பொண்ணால எனக்கு ஒரு நாள் லாஸ் ஆஃப் பே’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். நிஜத்தில் சொந்த பந்தங்களிடம் பலமுறை கேட்ட அனுபவத்தால், தியேட்டரில் கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

படம் முழுதும் வியாபித்திருக்கும் அஞ்சலியின் அட்டகாசம், தியேட்டரை விட்டு வந்தும் நினைவை விட்டு அகல மறுக்கிறது.

எனக்கு தெரிந்த வரையில் தமிழில் வாகன விபத்தை இத்தனை விலாவரியாக திரைப்படுத்தியதாக தெரியவில்லை... வாகன ஓட்டிகளுக்குள் ஒரு அதிர்வலையை நிச்சயமாய் உண்டுபண்ணுகிற படம்.


கொசுறு : சரவணன், ரமணா திரைப்படத்தில் விஜயகாந்த் கல்லூரியில் கைது செய்யப்படும் காட்சியில் வகுப்பறைக்குள் மூச்சிரைக்க ஓடிவந்து மாணவர்களிடம் கைது தகவலை சொல்லும் மாணவத்தலைவன் பாத்திரத்தில் நடித்திருப்பார்.

கால் கிலோ கருப்பு புளி.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் (பயப்படாதீங்க, நடந்து முடிந்த ஃபைனலை பற்றி மொக்கைப் போடப்போவதில்லை...) ஜூனியர்-3 க்கான விளம்பரம். இரண்டு மூன்று வித்தியாச ஸ்கிரிப்ட்டில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தாலும், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் விளம்பரம்.

கால்கிலோ கருப்பு புளியும் மஞ்சள்தூளும் வாங்க கடைக்கு செல்லும் சிறுவனின் சேட்டைகள். ஒவ்வொரு வீட்டிலும் அச்சிறுவனைப்போல் ஒரு வாண்டு கண்டிப்பாக இருக்கும். அடுத்த முறை எப்போ போடுவார்கள் என்று எதிர்பார்க்க வைக்கும் விளம்பரம்.

50 ரூவா.

நாலு இஞ்ச் பைண்டிங் நோட்டில் அரை கிறுக்கலாய் எழுதி, வாங்கிய காசை பத்திரப்படுத்தியதும் பேப்பரை கிழித்து எறியும் வாய்ப்பு நம்மூர் போலீஸிக்கு இனிமேல் வாய்க்காது போல... மீனம்பாக்கம் ஏர்ப்போர்ட் சிக்னலில் பச்சை விளக்குக்கு பணிந்து விருட்டென்று கிளம்பி செல்ல எத்தனிக்கயில் காரை ஓரங்கட்ட சொன்னார் டிராபிக் கான்ஸ்டபிள். கிரெடிட் கார்ட் ஸ்வாப்பிங் மெஷின் போல் இருந்த கையடக்க பொட்டியில் கார் நம்பரை தட்டி, மளிகை கடை லிஸ்ட் போன்ற பேப்பரை கையில் கொடுத்து “ சார், ஃபைன் ரிசிப்ட் ஒரு நாள்தான் வேலிடிடி. நம்பர் பிளேட்டை சீக்கிரம் மாத்துங்க” என்றபடியே நகர்ந்தார். விவாதத்திற்க்கு தயாரான என்னை சற்றே ஆச்சரிய படுத்தியது அந்த மளிகை கடை லிஸ்ட்.

நாளைக்கு முதல் வேலயா பாக்கெட்டுல 50ரூவா மறக்காம எடுத்து வச்சிக்கனும்.

Sunday, May 8, 2011

கிறுக்கல்கள் - 08-05-2011.

இந்த சம்மரில் உடைத்த மொத்த கூலிங்கிளாஸ் எண்ணிக்கை : 4. ஒவ்வொரு முறையும் வாங்குவதும் சட்டைப்பட்டனில் மாட்டி கீழேவிழுந்து சடுதியில் உடைவதுமாய் இருந்தது. ஐந்தாவதாக வாங்கியது ஃபைபர் கிளாஸ். வாங்கியதிலிருந்து நேற்றுவரை குறைந்தது 10 தடவையாவது கீழே விழுந்திருக்கும். ஃபைபர் என்பதால் உடையவில்லை.. மாறாக இடது வலது கண்ணாடிகள் முறைவைத்து கழண்டு விழும். சரி செய்ய அருகில் இருக்கும் கண்கண்ணாடி கடையில் நுழைந்துவிடுவதுண்டு. காரணம் ????? இதுவரை எந்த கடையிலும் சர்வீஸ் சார்ஜ் வாங்கியதில்லை...
சென்னையில் பல இடங்களிலும், மயிலாடுதுறையில் இரு முறையும் சரிசெய்து கொண்டேன்.

கொஞ்சம் ஆச்சரியம் தான்... பொதுவாக ஒரு கடையில் பொருள் வாங்கும்போது வாடிக்கையாளரை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு இது போல ஃப்ரீ சர்வீஸ் செய்து கொடுப்பார்கள். ஆனால் எந்தக்கடையில் வாங்கியதாக இருந்தாலும் கண்ணாடிக்கு சர்வீஸ் சார்ஜ் வாங்குவதில்லை... ஏன்??? தெரிந்தால் சொல்லுங்களேன்....

குரோம்பேட்டை MIT மேம்பாலத்தை வழக்கம்போல் வாகனங்களை முந்திக்கொண்டு கடக்கையில் தென்பட்டது எதிரே கிராஸ் செய்த ஒரு டெம்போ டிராவலர் “நயிநார் டிராவல்ஸ்” என்ற முகப்போடு... அடடா.. என்ன ஒரு தமிழ் ”படுத்து”தல்.சொன்னவருக்கு தெரியவில்லையேனில் எழுதியவருக்காவது தெரிய வேண்டாமா???

(மாயவரத்தில் “பாப்புலர் டிஜிட்டல் பிரஸ்” என்று ஒரு அச்சகம் இருக்கிறது. இங்கு அச்சடிக்கப்படும் அனைத்து வாசகங்களும் அச்சக ஓனர் படித்துப்பார்த்த பிறகே அச்சுக்கு அனுமதி அளிக்கப்படும். கொடுக்கின்ற காசில் முன்னபின்ன இருந்தாலும் அட்ஜட் செய்துகொள்ளும் அவர் , பிரசுரிக்கப்படும் வாசகங்களிலோ/எழுத்திலோ அச்சக பணியாளர்கள் பிழை செய்திருந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார், ஒரு முறை தமிழ்நாடு அரசின் முத்திரையை ஒரு ஃப்ளக்ஸ் பேனரில் போடச்சொன்னதற்க்கு இந்த மாதிரி விசயங்களுக்கு அரசு முத்திரையை போடக்கூடாதுன்னு கடைசிவரை மறுத்துவிட்டார்.)

”அங்கிள், உங்க அம்மாவ இன்னக்கி விஷ் பண்ணீங்களா???” முன்னிரவில் சந்தித்த நண்பர் ஒருவரின் 8 வயது மகள் கேட்க, அவளே அன்னையர் தினத்தைப்பத்தியும் தான் அம்மாவை விஷ் பண்ணியதையும் தொடர்ந்துகொண்டிருந்தாள். ரசத்தில் பெருங்காயத்தை கொஞ்சம் அதிகமா போட்டதற்க்காக கடிந்துகொண்டே மதியம் சாப்பிட்டது நினைவிற்க்கு வந்தது.....

(அன்னையர் தினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒண்ணு உண்டு..... வருடம் முழுதும் தங்களுக்காக வீட்டில் சுழலும் அம்மாவை அன்னையர் தினத்தன்று சந்தோசப்படுத்த முடிவு செய்து இரவு முழுவதும் பயண ஏற்ப்பாடுகள் செய்கிறார்கள், அம்மாவோ கஷ்டப்பட்டு எல்லாருக்கும் சாப்பாடு தயார்செய்து விட்டு அசதியில் தூங்கிவிடுகிறார்... விடிந்து பார்த்தால் வீட்டில் யாரையும் காணோம், எல்லோரும் அன்னையர் தினத்தை கொண்டாட சென்றுவிட்டார்கள்...)

பலரது வீட்டில் இப்படித்தான் அன்னையை கொண்டாடி வருகிறோம், எங்கள் வீடு உள்பட...

ஜெயா டிவியில் நேற்று மாலை ”கண்ணாடி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகையில் தமிழருவி மணியனின் குரல் கேட்டு ரிமோட்டுக்கு சற்று ஓய்வு கொடுத்தேன்... சுதந்திர போராட்ட தியாகிகள்/ முன்னால் ராணுவத்தினர் பற்றியும் அவர்களுக்கான அரசாங்கச்சலுகைகள் மற்றும் அதிலுள்ள அவலங்கள் பற்றிய தொகுப்பு நேற்றைய நிகழ்ச்சி.
மலேயாவில் ஒரு கூட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகையில் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது ஆறு பவுன் வளையலை அவரிடத்தில் அன்பளிப்பாய் அளித்ததையும், தன்னையும் ராணுவத்தில் இணைத்துக்கொண்டதையும், தற்போதைய வாழ்க்கை சிரமங்களையும் 85 வயது மூதாட்டி விவரிக்க பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்ப்பாளர்கள் முகங்களில் உணர்ச்சிக் கலவைகள்... நிகழ்ச்சியின் இறுதியில் பரிசு பெற்றபோது அவர் அடித்த அந்த சல்யூட்........ அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.

Wednesday, May 4, 2011

Ctrl+Alt+Delம், சுஜாதா விருதும்....

உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து நடத்தும் சுஜாதா விருது வழங்கும் விழா....

”தேவநேயப் பாவாணர்” அரங்குக்கு வழி கேப்பவர்கள் வாயில் சுளுக்கு விழுவது நிச்சயம்... “ஆனந்த் தியேட்டர் தாண்டி ரெண்டாவது பில்டிங்ண்ணே......” அப்துல்லா போனில் வழி சொல்கயில் வேக வேகமாய் தலையாட்டிய நான் மிகச்சரியாக வழியை தவறவிட்டு, அரங்கத்தின் பெயரை (ஆத்தாடி..... நாக்கு எவ்ளோ ரோலிங் ஆவுது...),, சொல்லி வழிகேட்டு மீண்டு(ம்) வருவதற்க்குள் மதன் பாதி பேச்சில் இருந்தார்....

அரங்கு நிறைந்த கூட்டம்.... டேலிங் ஃபேன் (டேபிள் ஃபேனை சீலிங்கில் மாட்டியிருந்தால் எப்படி சொல்வதாம்???) இருந்த இடமாய் பார்த்து ஒதுங்கி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கயில் “தனக்கு பின்னால் பேச இருப்பவர்களுக்கு நேரப்பற்றாக்குறை பிரச்சினை வந்துவிடாமல்” தனது பேச்சை விரைவாக முடித்துக் கொள்வதாக பத்து நிமிடமாக சொல்லிக்கொண்டிருந்தார் மதன் .

உயிர்மை பதிப்பக சார்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ”உயிர்மை” மாத இதை புரட்டிப்பார்க்கிறேன் பேர்வழி என்று படித்து முடிக்கையில் மதனும் பேச்சை முடித்திருந்தார். அடுத்து பேச இருந்தவங்களுக்கு கொஞ்சம் நேரம் மிச்சம், எனக்கு இருபது ரூபாய் மிச்சம் (”உயிர்மை” மாத இதழ் விலை இருபது ரூபாயாம்).

அடுத்து பேச (தனது இருக்கைக்கு பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை உஷாராய் கையோடு எடுத்துக்கொண்டு)வந்த சாரு மைக் பிடித்தார். புத்தக கண்காட்சியில் அவரோட தண்ணீர் பாட்டிலை யாரோ ஆட்டய போட்டத பத்தி ரொம்ம வருத்தப்பட்டு அவரோட பிளாக்ல எழுதி இருந்ததை ”இந்த நேரத்திலே எண்ணிப்பார்க்கிறேன்...” (அய்யய்யோ நமக்கும் ஒட்டிக்கிச்சே....)

இணைய விருதுக்காக யுவகிருஷ்ணா தேர்தெடுக்கப்பட்ட விதத்தையும் , அதனால் ஏற்ப்படப்போகும்(?) கான்ட்ரவர்ஸி பத்தியும் சாரு இரண்டுமுறை குறிப்பிட, மேடையின் இடக்கோடி இருக்கையில் இருந்த யுவகிருஷ்ணா நெளிந்ததையும் பார்க்க முடிந்தது...

சாரு வழக்கம் போல லத்தீன் அமெரிக்க அறிவாளிகளையும் , மலையாளத்து மைனர்களையும் பேச்சில் இழுத்து, பேச்சை இழுத்துக்கொண்டிருக்கயில் சற்றே பார்வையை திருப்பி மேடையை ஒரு அரை வட்டம் சுற்றினேன்.


இடமிருந்து வலமாய்.... சுஜாதாவின் (வெகு நாட்களுக்குப்பிறகு திருமணத்திற்க்கு சம்மதித்த)மூத்த மகன், சாந்தமாய் அமர்ந்திருந்த சுஜாதா(அவருக்குப்பின்னால் இருந்த பேனரில் அதைவிட சாந்தமாய் சுஜாதாவின் முகம்.....)ஆர்மி ஆபீசர் தோரணயில் ஜோ.டி.குருஸ்,ஞானக்கூத்தன் ஆழ்ந்த யோசனையில் மனுஷ்ய புத்திரன், சற்றே அவஸ்தையாய் இ.பா, மோவாயை இடதுகையில் தாங்கிய எஸ்.ரா, காபி அருந்தியபடி பாரதி கிருஷ்ணகுமார், அருகிலே வண்ணதாசன் ( பாக்கெட்டில் பளபளப்பா என்னது சார்???), அடுத்ததாய் ஸ்ரீநேசன், பக்கமாய் யுவகிருஷ்ணா, இடையில் மதன், இறுதியாய் ஹரிகிருஷ்ணன்,

(அமர்ந்திருந்தவர்கள் பிறகு இடம் மாறியிருந்தாலோ, என்னைப்போல பாதியிலே நடையை கட்டியிருந்தாலோ கம்பெனி பொறுப்பாகாது...)

அப்துல்லா, கேபிள், கே.ஆர்,.பி.செந்தில், விந்தைமனிதன், எறும்பு, ”ழ” ரமேஷ் இவர்களோடு ஒரு மினி சந்திப்பு......

பல்லிடுக்கில் மாட்டியிருந்த வேர்க்கடலையை நாக்கால் நெருடியபடி (மீண்டும்) அலுவலகம் வந்து சேர்கையில் மணி சரியாய் ஒன்பது அம்பத்தி எட்டு. விழாவிற்க்கு சென்றுவருவதற்காக பத்து மணிக்கு மாத்தி வைத்திருந்த மீட்டிங்கை அட்டெண்ட் செய்வதற்காய் அவசர அவசரமாய் இருக்கையை ஆக்கிரமித்து Ctrl+Alt+Del அடிக்கையில் ஏனோ அவரின் முகம் ஞாபகம் வந்தது.....
( Ctrl+Alt+Delன் பயன்பாடு பற்றி நான் முதல் முதலாய் தெரிந்து கொண்டதே
சுஜாதாவின் கட்டுரையில் தான்...)

WE MISS YOU SIR........

2011க்கான சுஜாதா விருது பெற்றவர்கள்:
வண்ணதாசன் : படைப்பு : ”ஒளியிலே தெரிவது” (சிறுகதை)
ஜோ.டி.குருஸ் : படைப்பு : ”கொற்கை” (நாவல்)
அழகிய பெரியவன் : படைப்பு : ”பெருகும் வேட்கை” (கட்டுரை)
ஸ்ரீநேசன்: படைப்பு : ”ஏரிக்கரையில் வசிப்பவன்” (கவிதை)
மு.ஹரிகிருஷ்ணன்: படைப்பு : ”மணல் வீடு” (சிற்றிதழ்)
யுவகிருஷ்ணா : படைப்பு : ”பதிவுகள்” (இணையம்)