Friday, March 8, 2013

ஒரு புளியமரத்தின் கதை.


ஒரு புளியமரத்தின் கதை : என் பார்வையில்...


ஒரு புளிய‌ம‌ர‌த்தை க‌தைக்க‌ருவின் நாய‌க‌மாக‌ ( அஃறிணை???) கொண்டு இப்ப‌டி ஒரு ப‌டைப்பை உருவாக்க‌ முடியுமா? என்று எல்லோருக்கும் உருவாகும் ச‌ந்தேக‌ம் என்னுள்ளும் வ‌ந்த‌தில் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ ஏதுமில்லைதான்.



க‌தையின் ஆர‌ம்ம‌ க‌ட்ட‌ங்க‌ளில் ப‌னிப்ப‌ட‌ல‌மாய் ம‌ன‌தில் உருவ‌க‌ம் பெற்ற‌ புளிய‌ம‌ர‌ம்(வேப்ப‌ம‌ர‌ம்?), கொப்ளான் வெட்ட‌ முய‌ற்சிக்கையில், தாமோத‌ர ஆசானுடன் நானும் மனதினூடே போராடுகையில் கொஞ்சமாய் பதிய ஆரம்பித்து, தேர்தல் நேரங்களில் எப்போது முடுவுகட்டுவார்களோ என்ற பதபதைப்புடன் வாசிப்பை தொடர்ந்து, தாய்தடியில் கூலி ஐய்யப்பனால் விஷம் வைக்கப்படும்போது தொண்டை எச்சில் காய்ந்து போகிறது.


எல்லாம் முடிந்து மரம் பட்டுப்போய் நிற்கையில்,மரத்தை உருவகப்படுத்த மனமின்றி புத்தகத்திற்க்கு சற்று ஓய்வு கொடுக்க எண்ணி மூடி வைக்கையில் கண்ணில் பட்டது புத்தகத்தின் கடைசிப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பட்டுபோன மரத்தின் படம் ( ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்).




பழக்கப்பட்டிறாத பல வார்த்தைகளை சுகாவின் வேணுவனம் மற்றும் தாயார் சன்னதியில் பரிச்சயப்படுத்திக்கொண்டது சௌகரியமாகவே இருந்தது.


சக்கரம் என்ற வார்த்தைக்கான சரியான அளவுகோலை புத்தகத்தின் கடைசி பக்கத்தில் தெரிந்துகொள்கையில் சற்றே சந்தோசம்.


புரியாத வார்த்தைகள் வந்து விழுகையில் அர்த்தம் தெரியவில்லையே என்ற கவலையைவிட, இவ்வளவு வட்டார வழக்கு சொற்கள் வழக்கொழிந்து போய்விட்ட கவலையே மேலோங்கியது.



"கிண்ட‌ல் செய்வ‌து" என்ற‌ ப‌த‌ம் என‌க்கு தெரிந்து ச‌மீக‌மாக‌ வ‌ழக்க‌ழிந்து வ‌ரும் சொற்க‌ளில் ஒன்று. சென்னை ப‌குதிக‌ளில் ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டுக்கொண்டிடுந்த‌ "க‌லாய்ப்ப‌து" என்ற‌ வார்த்தை த‌ற்போது எல்லா ப‌குதிக‌ளிளும் சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

சுந்த‌ர‌ ராம‌சாமியின் முத‌ல் ப‌திப்பு(1966) முன்னுரையில் சொல்லியிருக்கும், கூலி ஐய்யப்பனின் உறவாக கொண்டு செல்லப்படவேண்டிய பொரிகடலைக்காரியின் (கதா)பாத்திரத்தை கதையின் போக்கில் இடையிடையே நானே பொருத்திப்பார்த்ததுண்டு.


ஊருக்கு செல்கையில் அருகருகே நின்றுகொண்டு கிளைகளால் இழைந்து கொண்டிருக்கும் கொல்லைப்புற புளியமரத்தையும், வேப்பமரத்தையும்(எங்கள் வீட்டு சாமி மரம்) ஆசையாய் தடவிப்பார்க்க வேண்டும்.

ஒரு சந்தேகம் : சு.நா. தனது ஐந்தாவது பதிப்பின் முன்னுரையில், கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் புளியமரம் தனது ஊரில் இருந்த ஒரு வேப்பமரம் என்று தெரிவிக்கிறார். அப்புறம் ஏன் கதையில் வேப்பமரம்ன்னு எழுதாமல் புளியம‌ரம்ன்னு எழுதியிருக்கிறார்???  இதுவும் ஒரு வழக்கு சொல்லா இருக்குமோ? இல்லாட்டிஏதாவது வேண்டுதலா இருக்குமோ?????

******************************************

த‌லைப்பு : ஒரு புளியமரத்தின் கதை.

நூல் ஆசிரியர்: திரு.சுந்தரராமசாமி.

பதிப்பகம் : காலச்சுவடு.

விலை : 175

IBSN # : 978-81-90080-10-1

******************************************