Monday, August 23, 2010

இதுக்கு என்ன பேர் வைக்கலாம்?

"வேதாசலம், ஒவ்வொரு கூட்டத்துலயும் ஒன்னோட பேச்சுக்கு அப்ளாஸ் அள்ளுதுய்யா. சாதிய எதுர்ப்பு பத்தி நீ பேசுறத மணிக்கணக்கா கேட்டுக்கிட்டே இருக்கலாம். சும்மாவா, உனக்கு கச்சியிலயும் ஆட்சியிலும் முக்கிய பதவி கொடுத்து என் கூடவே வச்சிருக்கேன்.சரிய்யா, நா கிளம்புறேன், நாளக்கி பொதுகுழுக்கு சீக்கிரம் வந்து சேரு.........." கிளம்பிய கட்சி தலைவருக்கு கையசைத்த வேதாசலம் தனது ரெட்ட நாடி சரீரத்தை திணித்துக்கொள்ள, சைரன் அலறலுடன் புறநகர் பங்களா நோக்கி சீறியது வேதாசலத்தின் கார்.

"சொல்லு குமரா, ஏதோ பேசணும்ன்னு சொன்னியே", கண்ணாடியை பனியனின் உள்பக்கத்தில் துடைத்தவாரே மகனை ஏறிட்டவரின் எதிரில் வந்தமர்ந்தான் குமரன்.


"அப்பா, நா ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்..... " பேசிக்கொண்டு இருந்த குமரனை சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார் வேதாசலம்.

படபடவென சொல்லி முடித்து, வேதாசலத்தின் முகபாவத்தை படிக்க முயற்சி செய்துகொண்டிருந்த குமரனுக்கு அப்பாவின் அந்த கேள்வி சற்றே சந்தோசத்தை கொடுத்தது. இதழோரம் வரவைத்துக்கொண்ட புன்னகையிணூடே "நீங்க, கண்டிப்பா கேப்பீங்கன்ணு தெரியும்பா, அவளும் நம்ம ஜாதிதான்............".
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஹலோ, எங்க கிளம்பிட்டீங்க, கத இன்னும் முடியல...... கொஞ்சம் கீழே படிங்க....

"குமரா, இந்த கல்யாணம் நடந்தா என்னோட அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாயிடும். அவளை மறக்குற வழிய பாரு........... " முடிவாய் சொல்லிவிட்டு தன்னறைக்கு செல்லும் வேதாசலத்தை பார்வையால் வெறித்துக்கொண்டிருந்தான் குமரன்.

Wednesday, August 18, 2010

வருத்தப்படாத வாலிபால் சங்கம்(ஸ்தாபிதம்:மார்ச்-2008)


2008 ல் ஆரம்பித்த ஒரு விசயம் நேற்று வரை தொடர்கிறது.....

என்னதான் நடந்துச்சின்னு நீங்களே படிங்களேன்....

2008 மார்ச் மாசத்துல ஒருநாள் ஆஃபீஸ்ல வாலி பால் லீக் மாட்ச் நடக்கப்போவுதுன்னு மெயில் அனுப்புனாங்க. ஊருல ஸ்கூல் / காலேஜ் டைமுல விளையாடி இருக்கறததுனால நானும் ஒரு டீம் ரிஜிஸ்டர் பண்ணிட்டேன். டீம் பேரு v.v.s ( "வருத்தப்படாத வாலிபால் சங்கம்")

டீம் ரிஜிஸ்டர் பண்ணியாச்சி, இப்ப டீமுக்கு ஆளு சேக்கணுமே... ஒரு வழியா ஆஃபீஸ்ல ஒரு மூணு பசங்கள தேத்தித்டேன்.(கோவை ப்ரதர்ஸ் படத்துல சத்தியராஜூம் வடிவேலும் கிரிக்கெட் விளயாட ஆள் புடிப்பாங்களே, அந்த மாதிரி....)

அடுத்ததா ஒரு பிரச்சினை, மேட்ச் ரூல்படி ஆறு பேருல ரெண்டு லேடீஸ் பிளேயர் கண்டிப்பா இருக்கணும். ஒரு வழியா இன்னொரு டீம்ல உள்ள ஒரு வெள்ளக்கார புள்ளைய கரெக்ட் பண்ணி, அந்த புள்ள வழியா அதோட கேர்ல் ஃபிரண்ட கரெக்ட் பண்ணி ( என்னமோ அவனோட கேர்ல் ஃபிரண்ட் மாதிரி சொல்லுரானேன்னு நீங்க நினைப்பீங்க,சும்மா எழுதும்போதாவது இப்படி எழுதி மனசதேத்திக்கலாம்ணுதான்) ஆறு பேர் ரெடீ பண்ணிட்டேன்.

அப்பாடா.... ஒரு வழியா எல்லாம் முடிஞ்சிது, களத்துல எறங்க வேண்டியதுதான் பாக்கின்னு நினச்சிக்கிட்டு இருக்கும்போது டீம் என்ரோல்மென்ட் பீஸ் 400$ கட்ட சொல்லி மெயில். ( 400$ பத்தி முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த ஏரியா பக்கமே எட்டி பாத்துருக்க மாட்டேன்....) . அந்த ரெண்டு வெள்ளக்கார புள்ளங்க கிட்ட பங்கு கேட்டா "உங்க கூட விளயாடுரதே அதிகம்.. இதுல பங்கு காசு வேற கொடுக்கன்னுமான்னு கோச்சிகிட்டு கா விட்டுருவாங்கலோண்ணு பயம். ஒருவழியா 400$ல பசங்க நாலு பேரு மட்டும் பங்கு போட்டு கட்டுனோம். பணத்த கட்டிட்டு நாங்க நாலு பேரும் ஆளு வச்சி அழுது தீர்த்ததுதனிகதை.

ஒரு நல்ல நாளா பாத்து (நம்ம ஊருன்னா பஞ்சாங்கம் பாக்கலாம், இது அமெரிக்கா இல்ல அதனால வெதர் ரிபோர்ட்.) மாட்ச் ஆரம்பிச்சாங்க. அப்படி இப்படி ன்னு விளையாடி 24 லீக் கேம்ல 19 கேம் . பண்ணி Rank-1 வந்துட்டோம் .

லீக் மாட்சில win பண்ணி அடுத்த லெவெல்க்கு போனா பாடிகாட் முனீஸ்வரருக்கு பதினொரு தேங்கா உடைக்கறதா வேண்டி இருந்தேன். லீவுக்கு இந்தியா வரும்போது முதல் வேலையா அத நிறைவேத்தனும்.

ஒரு வழியா Semi-finals ம் Win பண்ணி Final மாட்ச்க்கு ஸெலெக்ட் ஆகிட்டோம். நிறைஞ்ச அமாவாசை அன்னைக்கி Final மாட்ச் நடந்துச்சு. அமெரிக்கால இருக்குறவனுக்கு அமாவாசைய பத்தி எப்படி தெரியும்னு நினைக்காதீங்க. வீட்டுல தமிழ் மாச காலண்டர் வச்சிருக்கோமுல்ல.

Final மாட்ச்ல நமக்கு கிரகம் சரியில்ல, அதனால “Runner-Up.” தான் கிடைச்சிது. “Runner-Up”னா சும்மாவா, வெற்றி கனியை தொட்டு பாத்துட்டு வந்துருக்கொமிலான்னு சவுண்ட குடுத்துக்கிட்டு திரிஞ்சோம். அப்படியே 2009 மேட்ச்ம் நடந்தது, அதுலயும் "Runner-Up".

2010க்கான league மாட்ச் ஏப்ரல்ல ஆரம்பிச்சி நேத்து முடிஞ்சிது, வழக்கம்போல final மாட்சில "Runner-Up".

ம்ம்ம்….. மூணு வருசமா “Runner-Up” டைடீல் வாங்கினததுனால இந்த உலகம் இன்னும் நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு………..

இன்னும் எத்தனை நாளைக்குதான் விளையாட தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது……..

Thursday, July 29, 2010

ஓ-ஞாநி:பத்திரிக்கை சுதந்திரம்-பறிக்கப்படும் தந்திரம்

"உருப்படியா எழுத விடாம உருளைகிழங்கை பத்தி எழுத வக்கிராங்க..." , ஜுலை 6ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு அமெரிக்காவின் - அட்லாண்டிக் எக்ஸ்பிரஸ்வேயில் காரில் சென்று கொண்டு இருக்கயில் ஞாநி சொன்ன வார்த்தை......


அன்றிரவு கார் பயணத்தில் குமுதம்- ஓ பக்கங்கள் சம்பந்தமான பேச்சே அதிகம் பயணித்தது. வார்த்தை முடிவுகள் கடிதமாய் மாறியுள்ளது இப்போது......


சமீப காலமாய் ஞாநியின் கட்டுரைகளின் சில சாராம்சங்கள் குறிப்பாக அரசுக்கு, ஆளும் கட்சிக்கு எதிரான விசயங்கள் குமுதம் நிர்வாகத்தால் நீக்கப்பட்டோ அல்லது திருத்தப்பட்டோ வெளிவந்தன. மேல்மட்ட நிர்வாகத்தில் வந்துள்ள பிரிவினை இதற்கான அடித்தளம் என்று தெரிகிறது...


"எழுத்தில் சமரசம் என்பது எனக்கு ஒத்துவராத விசயம், இந்தியா திரும்பியவுடன் என்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்தி இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்பதே அவருடைய இறுதி முடிவாய் இருந்தது. அந்த முடிவு மின்னஞ்சல் வாயிலாக குமுதத்தை சென்றடைந்திருக்கிறது.


குமுதம் வார இதழில் தன்னால் ஓ பக்கங்கள் கட்டுரையை தொடர்ந்து எழுத முடியாததற்கான காரணங்களை தெரியப்படுத்தி அதனை தனது வலைப்பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.



ஞாநி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதங்கள்












எனக்கு ஒரே ஒரு சந்தேகம் : பத்திரிக்கை (சு)தந்திரம், அச்சு ஊடக (அ)சாத்தியம், ஊடக தார்(மீகம்) அப்படீனெல்லாம் பேசுறாங்களே... அப்படின்னா என்னங்க???


(பதிவு புடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போங்களேன்.... )


Wednesday, July 28, 2010

காற்று வாங்க போன கலைஞர். கல்லா கட்டிய ஜூ.விகடன்

இரண்டு வரிகளில் எதுகை மோனையாக தலைப்பு வைத்து கவர் ஸ்டோரி போட்டு கல்லா கட்டுவதில் வார இதழ்கள் கை தேர்ந்தவை. ஜூனியர் விகடன் மற்றும் குமுதம்-ரிப்போர்ட்டர் இதழ்களுக்குள் இதில் போட்டியே நடக்கும்.


"வரும்படிக்கு வழி செய்யும் வார்த்தை விந்தைகளை வாரஇதழ்கள் வழக்கமாக (அட.... நமக்கு கூட வருது...) பயன்படுத்துவார்கள். சாதாரண விசயத்தை தலைப்பில் பூதாகரமாக்கி உள்ளே படிக்கையில் புஸ்ஸ்......... என்று போக வைக்கும் பல விசயங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம் இந்த புதனன்று ஜூனியர் விகடனில் வந்துள்ள "கடற்கரையில் காத்து வாங்க போன கலைஞரின்" கவர் ஸ்டோரி.





ஜூனியர் விகடன் - அட்டை படம் & கவர் ஸ்டோரிக்கான தலைப்பு . இந்த வரிகளின் அர்த்தத்தை ஒருமுறை மனத்தில் நினைத்துக்கொண்டு கீழே உள்ள படத்தில் கட்டம் கட்டிய வாக்கியங்களை படியுங்கள்...










அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் ஒவ்வொரு அசைவிற்க்கும் அர்த்தம் கற்ப்பித்து இவர்கள் போடும் கவர் ஸ்டோரி பல சமயங்களில் சிரிப்பை வரவழைக்கும்.


"ஆளுங்கட்சிக்கு ஆப்பு... அம்மாவின் அதிரடி" என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி போடுவார்கள். உள்ளே படித்தால் "ஜெயலலிதா புதிதாக வாங்கியுள்ள வெளிநாட்டு டீவியில் கலைஞர் டீவி அல்லது சன் டீவியை செலக்ட் செய்தால் டீவி தானாகவே ஆஃப் ஆகிவிடுமாம்...." என்ற ரேஞ்சிக்கு மேட்டர் இருக்கும்...


ரஜினியின் புதுபட ரிலீசின்போது வாரஇதழ்களில் "அரிதாரத்துக்கு சலோ ... ஆன்மீகத்துக்கு ஹலோ", "சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பிளான்" என்ற மாதிரியான தலைப்பில் "ரஜினி இந்த படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு" என்று ஒரு கவர் ஸ்டோரி கட்டாயம் வெளிவரும்.


சிவாஜி படம் படபிடிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், "சிவாஜி படத்தின் கதை", "தமிழ் இதழ்களில் முதல்முறையாக" என்று பில்டப் கொடுத்து ஒரு கதையை போட்டு இருந்தார்கள்
( குமுதமா இல்ல ஆ. விகடனான்னு சரியா ஞாபகம் இல்லை...) படம் வந்த பிறகு படத்தின் கதைக்கும் அவங்க போட்டுருந்த கதைக்கும் சம்பந்தமே இல்லை.


ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர்கள் பண்ணும் அளப்பரை.... ஸ்ஸ்........... யெப்பா.. தாங்க முடியலை.போகிற போக்கை பார்த்தால் பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலை மைய்யப்படுத்தி "கலைஞரின் கடைசி தேர்தலாய் மாறப்போகும் கண்ணம்மா பேட்டை கவுன்சிலர் தேர்தல்" அப்படீன்னு கவர் ஸ்டோரி போட்டாலும் போடுவார்கள்.


இது போன்ற கவர் ஸ்டோரி மேட்டரை பார்க்கும்போது "புலி வருது" கதைதான் ஞாபகத்துக்கு வருது.....







(பதிவு புடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போங்களேன்.... )

Thursday, July 15, 2010

பாவம் இந்த கிளி...

பாவம் இந்த கிளி... யாராவது வேலை கொடுங்கப்பா....




மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்ட நண்பர் ஹேம்ராஜ்க்கு நன்றி.

Wednesday, July 14, 2010

அமெரிக்காவில் ஞாநியுடன் மூன்று நாட்கள்.


எழுத்தாளர், அரசியல் விமர்சகர்,பத்திரிக்கையாளர், திரைப்பட,
குறும்பட/ தொலைக்காட்சி தொடர்கள் இயக்குநர், நாடகாசிரியர் (உஸ்...........யப்பா.. கண்ண கட்டுதே...) ஞாநி அவர்கள் ஜூன் 18 முதல் ஜுலை 11 வரை அமெரிக்காவில் பல பகுதிகளில் சுற்று பயணம் மேற்க்கொண்டார். ஜுலை 6,7,8 தேதிகளில் பிலடெல்பியாவில் எம்முடைய விருந்தினராக....

தினமும் இரவு 2 மணி வரை பல விசயங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்.

மனிதர் ரொம்பவும் எளிமையாக இருக்கிறார். முதல் நாள் அவரை அழைத்து வரும்போது நல்லபடியாக கவனித்துக்கொள்ள வேண்டுமே என்று சற்றே படபடப்போடு இருந்தேன். இரவு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததால் காலையில் நான் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்க "யோகேஷ், காப்பி சாப்பிடலாமா..." என்று திடீர் குரல் கேட்டு எழுந்தேன். கையில் காப்பி கோப்பையுடன் ஞாநி.... அதுமுதல் மூன்று நாட்களும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்.

முதல் நாள் அட்லான்டிக் சிட்டியில் உள்ள கேசினோ சென்று வந்தோம். இரவு நேர கார் பயணம் சோம்பலாக இல்லாமல் வெகு அருமையாக இருந்தது அவருடன் பேசிக்கொண்டே செல்கையில்.

மறுநாள் பிலடெல்பியாவில் லங்காஸ்டர் பகுதியில் உள்ள "ஆமிஷ் வில்லேஜ்" சென்றோம்.
(ஆமிஷ் மக்கள், அவர்களின் வாழ்க்கைமுறை பற்றி சில விவரங்களுடன் விரைவில் ஒரு பதிவெழுத எண்ணம்.)

நான் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்தும் பகுதியில்...



ஆமிஷ் வில்லேஜ்ல் ஞாநியுடன் நான்...


வரும் வழியில் மதிய உணவை முடித்துக்கொண்டு, பல விசயங்களை பேசிக்கொண்டு வந்தோம்.... பேச்சு பதிவுலகம் பக்கமும் பயணித்தது (ஆதியின் நர்சிம் பேட்டி முதல், மங்களூர் சிவாவின் செந்தழல் ரவிக்கான பதில் பதிவு வரை....)

வழியில் காரில் கடந்த ஒரு பாலத்தை அவரிடம் காட்டி "சார், இதுதான் பெஞ்சமின் பிராங்க்ளின் பாலம்" என்று சொல்ல "அப்படியா, பெஞ்சமின் எனக்கு பிடித்த மனிதர், அவர் ஒரு விசயத்தை கண்டுபிடித்தார், என்னனு சொல்லுங்க பாப்போம்" என்று அவர் என்னை திருப்பி கேக்க, நான் அவரை பார்த்த பார்வையில் அவரே பதிலையும் சொன்னார், மின்னலில் மின்சாரம் இருக்கிற விசயத்தை கண்டுபிடித்தவராம் பெஞ்சமின்.(நமக்கு மின்னலில் கண்டுபிடிக்கப்பட்ட ரீமாசென்ஐ பற்றி கேட்டால் தெரியும். நம்மகிட்ட போயி அந்த மின்னல பத்தி கேட்டா...)

பிலடெல்பியாவில் நடைபெற்ற "பிட்லர் ஆன் தி ரூஃப்" என்ற ஒரு மேடை நாடகத்தை பார்க்க ஆசைப்பட்டார், டிக்கெட் கிடைக்காததால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

இரவு உணவுக்குப்பின் நாங்கள் இருவரும் உரையாடியதை வீடியோவாக (ஹலோ, ஏன் பேட்டின்னு சொன்னவுடனே பேஸ்தடிச்சி பதிவ மூடிட்டு கிளம்புரீங்க... தொடர்ந்து படிங்க)
பதிவு செய்தேன். விரைவில் உங்கள் பார்வைக்கு.

மூன்றாம் நாள் டிரென்டன் ரயில் நிலையத்தில் நியூயார்க் செல்வதர்க்காக வழியனுப்பி வைத்து விடைப்பெற்றுக்கொண்டேன்.


டிரென்டன் ரயில் நிலைய முகப்பில் ஞாநி....

அவருடனான எனது மூன்று நாட்கள் ஒரு இனிய அனுபவம்......

ஞாநி சார் : நன்றிகள் பல.....

(ஞாநியின் வலைத்தளம் : http://www.gnani.net )

Saturday, July 10, 2010

FeTNAவும், பழமைபேசியும், நானும்...


வணக்கங்க யோகேஸ்வரன், நலமா இருக்கீங்களா" என்று தொலைபேசி உரையாடலை இவர் தொடங்கும்போது அவருடைய உற்சாகம் நம்மயும் தொற்றிக்கொள்ளும்.

FeTNA விழாவுக்கு அவசியம் வாங்க என்று இவர் அழைத்தபோது முடிந்தால் போவோம் என்று நினைத்து முன்பதிவு செய்தேன்.விழாவின் முதல்நாள் அலுவலகத்தில் ஆணிகள் பல. விழாவிற்க்கு செல்ல வேண்டாம் என்று நினைத்த என்னை இரண்டாம் நாள் விழாவில் கலந்துகொள்ள வைத்தது இவருடைய நேரடி வர்ணனை....

விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன்னால் இயன்ற உதவிகளை முகம் கோணாமல் செய்து,பதிவுலக நண்பர்களை அறிமுகப்படுத்தி, உபசரித்து .... இன்னும் பல சொல்லலாம்.



அப்துல்லாவுடன் பழமைபேசி


பேராசிரியை பர்வீன் சுல்தானாவுடன் பழமைபேசி


பழமைபேசி எழுதிய "ஊர்ப் பழமை" புத்தகம் விழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. நானும் ஒன்று வாங்கியுள்ளேன் (ஹலோ, ஓசியில இல்லங்க, காசு கொடுத்துத்தான், நம்புங்க...)

புத்தகத்தின் முதல் பக்க அட்டை



புத்தகத்தின் கடைசி பக்க அட்டை

நேற்று அலைப்பேசியில் அளவளாவிக்கொண்டிருக்கயில் "பழமை அண்ணே, விழாவுக்கு அவளவு தூரம் வந்துட்டு திரும்பியது களைப்பாக இருக்கிறது, இந்த வீக் எண்ட் ஃபுல்லா வீட்டுல ரெஸ்ட் தான், நீங்க பாவம் ரொம்ப களைப்பா இருப்பீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க"னு சொன்ன எனக்கு அவரின் பதில்.

"இந்த வாரம் Washington DCல தமிழ்ச்சங்க விழா இருக்குதில்லீங்க, அங்க போகணுமுல்ல...."

பழமைபேசி அண்ணே, உங்கள நெனச்சா எனக்கு தசவாதாரம் படத்துல வர இந்த வசனம்தான் ஞாபகம் வருது.

"தமிழார்வமும் இருக்கணும், அதே சமயம் விஞ்ஞானமும் தெரிஞ்சிருக்கணும்."