Saturday, January 1, 2011

நியூயார்க் நகரம் விழிக்கும் நேரம்..........

சென்ற வாரம் நியூயார்க் நகரின் பிரதான பகுதியில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் காலை 7 மணிக்கு இருக்க வேண்டி காலை 3 மணிக்கு எழுந்து .......முடித்து, ........டித்து...........த்து .............. து........ (நான் மட்டும் காலைல எழுந்த உடனே புதுசா என்ன பண்ணிடபோறேன்....... எல்லாரும் பண்ணுறதுதான்) காரில் அமர்ந்து ஜன்னல் வழிவந்த பனிக்காற்றை புறந்தள்ளி, இதமான செயற்க்கை வெப்பத்திற்க்கு உடம்பைக்கொடுத்து வெறிச்சோடிய நெடுஞ்சாலையில் விரட்ட ஆரம்பித்தேன், துணையாய் காதின்வழி நரம்பில் ஊடுருவும் கதிரியின் சாக்ஸபோன்...............


நியூயார்க் நகரின் ஐந்தாவது அவென்யூவில் காரை சொருகி, ஆறாவது அவென்யூ நோக்கி நடக்க ஆரம்பிக்கையில் மணி 6.30. பலமுறை நியூயார்க் சென்றிருந்தாலும் பின்னிரவு கேளிக்கைகள் முடிந்து, நகரம் சற்றே சாவகாசமாய் இருக்கும் காலை நேரத்தில் செல்வது இதுவே முதல் முறை.

வந்த வேலை முடித்து சற்றே ஆசுவாசமாய் தெருக்களில் நடக்க தொடங்கினேன் கழட்டிவிட்ட எருமை போல (நன்றி விக்னேஸ்வரி). கழுத்தில் கேமராவுடன் நிதான நடையில் தெருக்களை விழுங்கி தனிமையில் சுத்துவதில் தனி சுகம்.

டைம் ஸ்கொயர் பகுதி







சைக்கில் கேப்பில் காரை நுழைக்கும் நம்ம ஊர் ஆட்கள். நியூயார்க்கில் ஓ(ட்)டும் பெரும்பாலான டாக்ஸி-டிரைவர்கள் இந்தியர்கள், கூடவே நமது எல்லைக்கோட்டவர்களும்...




கூட்டங்கூட்டமா கிளம்பிட்டாய்ங்க.........









ஆரவார தெருக்கள் அமைதியாய்.............








கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகும் “ராக்-பில்லர் சென்டர்”





Friday, December 31, 2010

புது வருட Resolution.....

புது வருட Resolution.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..






(தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...............)

Saturday, December 4, 2010

ஸ்மைல் பிளீஸ்.........

டேய்........ பேட்டரி மூணு மணி நேரமா சார்ஜ் ஆயிடுச்சி.... முத போட்டாவா யென்ன யெடு..........


முண்டா பனியனுடன் முறைப்பாய் போஸ் கொடுத்துக்கொண்டிருந்த நண்பனை புதிதாய் வாங்கிய நிக்கான் கேமராவில் விழுங்கினேன்.


’கிளிக்’............. இந்த சத்தம் காதில் ரீங்காரமிடும்பொதெல்லம் மனசு அவரை நினைத்துகொள்ளும்.....


அவர்................. மாயவரம் நியூ போட்டோ ஸ்டூடியோவின் ஆஸ்தான போட்டோகிராபர் மற்றும் ஸ்டூடியோவின் 'ஆல்-இன்-ஆல்'.


சின்ன வயசில் முதல் முறையாய் போட்டோ எடுக்க என்னயும், அக்காவயும் அம்மா அங்கு கூட்டி செல்கையில் புது பேண்ட் சட்டை வாங்கி கொடுத்தால்தான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன்னு அடம்பிடித்த என்னை பளீர்ன்னு முதுகில் அம்மா ரெண்டு போட "புள்ளய அடிக்காதம்மா, இங்க வாடாப்பா"ன்னு என்னை அருகில் இழுத்து மடியில் அமர்த்தி தனக்காக வாங்கி வைத்திருந்த டீயில் பன்னை நனைத்து வாயில் ஊட்ட அழுகயை நிறுத்தினேன் நான்.


ஒழுகிய மூக்கை நாலு முழ வேட்டியின் உள்முனையில் துடைத்தவர் "பாரு, அழுததுல பௌடரெல்லாம் அழிஞ்ச்சிபோச்சி"ன்னு சொல்லிக்கிட்டே பௌடரை மூஞ்சில் அப்பிவிட்டு அக்காவின் பக்கத்தில் இருந்த உருலையில் என்னை தூக்கி நிப்பாட்டி ”சிரிடா ராஜா, ஆங்..... இங்க பாரு.......... ஆங்.............."


’கிளிக்’...........................


(நான் கேட்ட முதல் ‘கிளிக்’ சத்தம்.... இன்னக்கி தான் கேட்டது போல இருக்கு... இடையில் தான் எத்தனை வருடங்கள். பீரோவில் இன்றும் பத்திரமாய் இருக்குறது அந்த போட்டோ..........)


அக்டோபரில் லீவில் ஊருக்கு போனபோது நியூ போட்டோ ஸ்டூடியோவை கடந்து போக எத்தனிக்கயில் ஏதோ ஞாபகம் வந்தவனாய் சட்டென்று உள்ளே செல்ல, முன்னறை கல்லாப்பெட்டியில் இருந்த ரெட்டைநாடி சாரீரம் "உள்ள போங்க சார்"ன்னு கைகாட்ட, கருநீல துணியை விலக்கியபடியே இருளறைக்குள் பிரவேசித்தேன் நான்.


"கணுக்கால் பக்கம் கொசுவத்த சரிபண்ணிவிட்டுக்கம்மா, ம்ம்.......... இப்ப சரியா இருக்கு, அப்படியே நிமுந்து பாரு..... ம்..... தலய லேசா இந்த பக்கம்.......
ஆங்....... போதும் போதும்" என்றவாறே போகஸ் லைட்டுக்கும் அந்த பெண்ணிற்க்கும் இடையே கபடி ஆடிக்கொண்டுருந்தார் சாமி.


"சாமி.......... போட்டோ படம் யெப்ப ரெடியாவும்?"


கல்யாணி கவரிங் நெக்லஸை கழட்டிக்கொண்டே கேட்ட பெண்ணிடம் "ஏழே முக்கால் பஸ்ஸுலதான ஊருக்கு
போற, வாங்குற சாமானெல்லாம் வாங்கிட்டு பஸ்ஸ்டாண்டுக்கு போறப்போ வந்து வாங்கிட்டு போ........ அதுக்குள்ள போட்டு வக்கசொல்லுறேன்".


"திரும்பி வரும்போது மணிக்கூண்டுக்கிட்ட புருஷோத்தம இருப்பான், அவன்கிட்ட நெக்லஸை கில்ட் புடிச்சிக்க, போட்டா யெடுக்குறப்ப லைட்டு
வெளிச்சத்துல அங்கங்க கருப்பா தெரியுது. வேணும்னா கில்ட் புடிச்சதுக்கப்புறம் இன்னொன்ணு எடுத்துக்கலாம்."



சுவற்றுப்பக்கம் திரும்பி வேட்டியை உதறி இடுப்பில் இறுக்கியவர் "உங்களுக்கு யென்ன போட்டோ தம்பி?" என்றவரிடம் போட்டோயெடுக்க உள்ளே நுழையவில்லையென்றாலும் அந்த ரூமில் அவருடன் மேலும் சில நிமிடங்கள் இருக்க விரும்பி "பப்.......பாஸ்போட்" என்றேன் .


அதே சுறுசுறுப்பு, அதே நாலு முழம் , அதே வெற்று மார்பு,வேட்டியில் சுருட்டிய மூக்குபொடி டப்பா, சற்றே தளர்ந்த உடல்.


எங்கள் வீட்டில் அனேகமாக அனைவரும் இந்த ரூமில் நின்று, சிரித்து,பல்மூடி, கைகட்டி அவர் சொன்னதை தட்டாமல் செய்திருக்கிறோம்.
உறவினர் ஒருவர் அதே தெருவில் ஸ்டூடியோ வைத்திருந்தபோதும் எங்களுக்கென்னவோ இந்த ரூமின் மேல் ஒரு இனம்புரியாத ஒட்டுதல்.


போட்டோ எடுத்தப்பின் முன்பகுதிக்கு வந்து கம்யூட்டரில் அமர்ந்திருந்தவரிடம் "தம்பிக்கு பாஸ்போட் நாலு காப்பி" என்றவாறே கேமராவை கொடுத்துவிட்டு மூலையில் இருந்த தூக்குவாளியை எடுத்தவரிடம் "சாமி........ நேத்து வாங்கிட்டு வந்த தோசயில வச்சிருந்த தேங்கா சட்டினி ஊசிப்போயிருந்துது..........
தக்காளி சட்டினி வச்சி கட்ட சொல்லுங்க..........." கம்யூட்டர் ஆசாமியின் குரலுக்கு தலையாட்டியவர் என்னிடம் திரும்பி "தம்பி, நீங்க யெங்கயும் கட கண்ணிக்கு போகணும்னா போயிட்டு ஒரு அர மணி நேரத்துல வாங்க, போட்டு வச்சிருப்பாரு வாங்கிக்கலாம்". "யப்பா, தம்பி அவசரமா போட்டோ யெடுக்க வந்துட்டு போல, பிரிண்ட் போடுறதுக்கு முந்தி கொஞ்சம் சேவிங் பண்ணிடு".


சாப்பாடு வாங்க செல்லும் சாமியை பார்த்தபடியே படியிறங்கினேன் நான்.

Tuesday, November 30, 2010

அந்த மூவர்...

"பால் வந்தாலும் வரலன்னாலும் நீ போடுற காப்பி ஒரே மாதிரி தான் இருக்கும்..."
"என்னய்யா சரகம் கிரகம்னுகிட்டு..."
"என்னடா இது......... ரேசன் கடயில சீனிக்கு நிக்கிற மாதிரி நிக்கிறீங்க...."
.
.
.
.
.
.
.

ஏதாவது புரிஞ்சிதா? ......... இல்லியா??? அப்ப நீங்க அதிகமா தமிழ் சினிமா பாக்க மாட்டீங்க போல.....

சரி, இந்த படங்கள பாருங்க.....






.
.
(படங்கள் : கூகிளாண்டவர்)

இப்ப புரிஞ்சுதா.... இவங்க மூணு பேரு பேசிய வசனம்தான் மேல இருக்குறது....

சமகால குணசித்திர நடிகர்களில் எனக்கு பிடித்த மூவர். M.S.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா.

இவங்க மூணு பேரிடம் உள்ள ஒற்றுமை.

* கதாபாத்திரத்திற்க்கேற்ற இயல்பான நடிப்பு
* வசன உச்சரிப்பில் தேவையான ஏற்ற-இறக்கம்.
* திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமை
(கொஞ்ச நாளா தம்பி ராமையா நெலம கொஞ்சம் பரவாயில்ல)
* நடிப்பு தவிர சினிமாவின் மற்ற பகுதிகளில் தங்களை
ஈடுபடுத்திக்கொண்டவர்கள்.
இளவரசு : ஒளிப்பதிவாளர்,
பாஸ்கர் : பின்னணிக்குரல் கொடுப்பவர்,
தம்பி ராமையா: இயக்குநர்.
(இதயும் தாண்டி இவங்கள பத்தி நிறய விசயம் இருக்கு.
இப்பதிக்கி இது மட்டும்.)

அடடா........ பதிவ ஆரம்பிச்சாச்சி, இப்ப முடிக்கணுமே என்ன பண்ணுறது..... சரி finishing touch (???) குடுத்துறவேண்டியதுதான்.

சு . பதிவர் : "என்னப்பா எல்லாரும் ரேசன் கடயில சீனிக்கு நிக்கிற மாதிரி நிக்கிறீங்க...."
அ . பதிவர் : "அதுவா,லிவிங் டுகெதர் பத்தி தொடர் பதிவு எழுதப்போறோம். அதா எல்லாரும் தொடர்ச்சியா நிக்கிறோம்"
சு . பதிவர்: "அட என்னப்பா, நம்மள மாதிரி தனி பதிவா போட்டமா, கமெண்ட்ட பாத்தமான்னு இல்லாம தொடர் பதிவு தொடாத பதிவுன்ணுகிட்டு"
அ . பதிவர் : (மனசுக்குள்) " க்க்கும்.....கமெண்ட் போட்டாலும் போடாட்டாலும் நீ போடுற பதிவு ஒரே (???) மாதிரித்தான் இருக்கும்..."

பினா குனா : சு.பதிவர் =சுமார் பதிவர்/அ.பதிவர்= அப்பிராணி பதிவர். இதுல வேற எந்த உள்/வெளி/பக்கவாட்டு குத்தும் இல்லீங்கோவ்வ்வ்வ்வ்.............

Saturday, October 30, 2010

சார் போஸ்ட்.............


"என்னப்பா சமீபமா பதிவையே காணும்?" - அமெரிக்க வாழ் பதிவர் ஒருவர் மின்னஞ்சலில் கேட்டது.

"யோகேஷ்......... ஏங்க என்னாச்சி... கட ரொம்ப நாளா மூடி கிடக்கு" - ஐரோப்பிய நாடுகளில் அலுவல் பயணம் மேற்கொண்டிருந்தாலும் வாரமிருமுறை தவறாமல் அலைபேசும் பதிவர் கேட்டது...

"யோவ்... எதாவது பதிவ போடுய்யா... அதவச்சி எதிர்பதிவ போட்டு கொஞ்ச நாளைக்கு பொழப்ப ஓட்டுவோம்....." - சென்னையிலிருக்கும் நலம்விரும்பி ஒருவர் சாட்டில் சொன்னது....

........
இப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலங்க............. நடக்காதுன்ணும் தெரியும்.....
-------
போஸ்ட் போட்டு ரொம்ப நாளாச்சேன்னு (அடிக்கடி போட்டுட்டாலும்.....) போஸ்டயே போஸ்ட் ஆக்கிறலாம்ன்ணு ஐடியா பண்ணி அதுக்கான கோதாவுல எறங்கி........... ஸ்ஸ்........ யப்பா..............
மீதிய நீங்களே படிங்க........... இல்ல இல்ல பாருங்க....




அஞ்சல் அலுவலகம்.






அஞ்சல் அலுவலக வாசலில் தனியார் சேவைக்கான பெட்டி.





தபால் பட்டுவாடாவிற்க்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள்.





எங்கள் அடுக்ககதிற்க்கு தபால் கொண்டு வரும் தபால்காரர்.

இவரை தினமும் பார்ப்பதுண்டு.... சிநேக புன்னகையில் ஆரம்பித்து தமிழின் சில கெட்ட வார்த்தைகளை சொல்லித்தரும் அளவுக்கு பழக்கம்.....
36 வருசமாக இப்பணியில் இருக்கிறார்.... நான் பார்த்தவரையில் தன்னுடைய வேலையை அனுபவித்து செய்பவர்....









வீடுகளின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் தபால்பெட்டி....

( தபால்பெட்டியை பற்றி நினைக்கும்போதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி படித்த பாக்கியம் ராமசாமியின் ஜோக் ஒன்ணு எனக்கு ஞாபகத்துக்கு வரும்.. உங்களுக்கு அந்த ஜோக் தெரியுமா???)

தபால்காரரிடம் ஒரு மாஸ்டர் கீ இருக்கும். தன் வாகனத்தில் இருந்தபடியே தபால்களை இப்பெட்டியில் போட்டுவிடுவார்...




அடுக்ககங்களில் இதுபோல் இருக்கும்.

எனக்கு தெரிந்தவரை அமெரிக்காவில் இருக்கும் வாகனங்களில் வலப்புறம் ஸ்டீயரிங் உள்ளவை இரண்டு....
1) பயணிகள் பயன்பாட்டிற்க்கான பேருந்துகள்.
2) தபால் பட்டுவாடா செய்வதற்கான வாகனங்கள்.

வேறு ஏதாவது வாகனங்கள் இப்பட்டியலில் உண்டா??? தெரிஞ்சால் சொல்லுங்களேன்....

Saturday, September 4, 2010

நீச்சல்குளமும் ரெட்டைவால் குருவியும்.


இந்த வாரம் லாங்க் வீக்எண்ட் (Sep 6th Labor day) என்பதால் எங்கு செல்லலாம் என கடந்த மூணு வாரமாக திட்டம் போட்டு ஏற்கனவே போய் வந்த இடம், போகாத இடம், மீண்டும் போகத்தோன்றும் இடம், விமானத்தில் போக வேண்டிய இடம், காரில் போக வேண்டிய இடம் என்று அலசி ஆராய்ந்து கடைசியில் இந்த தடவை எங்கேயும் போகாமல் வீட்டில் ரெஸ்ட் எடுக்கலாம் என்று முடிவு பண்ணியாச்சி...

வெள்ளி இரவு நடுநிசி கடந்தும் தூங்காமல் பொட்டித்தட்டிக்கொண்டுருந்துவிட்டு அப்புறம் SAW படத்தின்
PART-V ம் PART-VI ம் பார்த்து முடித்து தூங்க செல்கயில் மணி காலை 5.30.

மதியம் 3 மணி சுமாருக்கு துகிலெழுந்து, மோட்டு வலையை பார்த்துக்கொண்டு படுத்திருக்கயில், குளத்துப்பக்கம் போலாமே என்ற யோசனை வர, சரி போயி ரொம்ப நாளாச்சேன்னு அபார்ட்மெண்ட்டின் தரைதளத்தில் இருக்கும் குளத்துக்கு கிளம்பினேன்.

எங்க அபார்ட்மெண்ட் குளத்துல குளிக்கறத்துக்கு கொஞ்சம் கெடுபிடி இருக்கும். அங்க உள்ள போர்டுல எழுதிபோட்டுருக்குற வரைமுறை படித்தான் நடந்துக்கணும்... சாரி.... குளிக்கணும்.

குளத்துல இறங்குறத்துக்கு முன்னாடி life guard ஒருத்தர் நம்மகிட்ட "நீச்சல் தெரியுமா?", "இதுக்கு முன்னாடி குளிச்சிருக்கியா"(பாத்ரூமுல இல்ல குளத்துல...)? அப்படீன்னு குறுக்கு விசாரணையெல்லாம் பண்ணிட்டு "OK, you can get into the pool now" அப்படீன்னு சொல்லிட்டு கைல ஒரு பட்டய கட்டிவிடுவார்.

நான் போனப்ப எப்போதும் இருக்குற life guard இல்ல, அவருக்கு பதிலா புதுசா ஒரு பொண்ணு ஒக்காந்துருந்துச்சி... என்ன பாத்து என்ன நினச்சிதுன்னு தெரியல, எதுவும் கேக்காமலே "Sir, you can get in" அப்படீன்னு சொல்லிட்டு கைல இருந்த ஐபோன நோண்ட ஆரம்பிச்சிடுச்சி...

எங்க வீட்டு குளத்துல( அட நாம இருக்குற வீட்ட நம்ம வீடுன்னு சொல்லுறது இல்லியா? அப்ப நம்ம வீட்டுல இருக்குற குளத்தை நம்ம வீட்டு குளம்னு சொல்லலாம்ல...) குளிக்க வந்தவங்க உடனே குளத்துல எறங்க மாட்டாங்க.... குளக்கரை ஓரமா மெதுவா ரெண்டு மூணு ரவுண்டு சுத்தி வருவாங்க. அப்புறமா குளத்த சுத்தி போட்டுருக்குற கட்டில்ல குப்புற பத்து நிமிசம், மல்லாக்க பத்து நிமிசம் படுத்திருப்பாங்க.... அப்புறம் கொண்டு வந்திருக்கிற புத்தகத்த பத்து நிமிசம் படிப்பாங்க.... அப்புறம் i-pod ல பத்து நிமிசம் பாட்டு கேப்பாங்க.... அப்புறம் கூட வந்திருக்குற பாப்பா வாயில தேனு இருக்கானு வாயால ஆராய்ச்சி பண்ணுவாங்க..... அப்புறமா தண்ணியில குதிப்பாங்க..... இப்படியெல்லாம்
பண்ணினாதான் பிரபல பதிவராம்... அய்யோ. மறுபடியும் சாரி.... பிரபல நீச்சல்காரராம்.....


குளிக்க(?) சென்றபோது எடுத்த போட்டோ.

ம்ம்ம்... நமக்கு தேனு எடுக்கறத்துக்கு எல்லாம் ஏது கொடுப்பினை.... அப்புறம் நாம இருக்குற கலருக்கு சூரியன பாத்து மல்லாக்க படுத்தா என்ன ஆவறது.... அதனால ஒரு ஓரமா நிழல்ல கிடந்த கட்டில்ல போயி படுத்துக்கிட்டு கைல எடுத்துட்டு போயிருந்த நம்ம பழமைப்பேசி அண்ணனோட ஊர்பழமை புத்தகத்த எடுத்து ஏற்கனவே படிச்சி விட்ட இடத்துலெருந்து படிக்க ஆரம்பிச்சேன்.....

பத்து நிமிசம் கழிச்சி புத்தகத்த நெஞ்சில் மல்லாத்தி விட்டு i-pod ட எடுத்தேன்... ஓவ்வொரு பாட்டா scroll பண்ணும்போது கண்ணில் பட்டது அந்த பாட்டு. பாட்டை select செய்வதற்க்குள் மனசு குளத்த தாண்டி, வீட்டை தாண்டி, ஏர்போர்ட் போயி, பிளைட் புடுச்சி கண்டம் விட்டு கண்டம் தாண்டி மெட்ராஸ்ல எறங்கி பஸ் புடிச்சி எங்க ஊரு குளக்கரைக்கு சென்றுவிட்டது.....

சின்ன வயசுல ஒருநாள் ஊரு குளத்துல குதியாளம் போட்டுக்கொண்டுருக்கயில் காற்றுவாக்கில் காதருகில் வந்த பாட்டு. அப்போது இன்னார் இசையில் வந்த பாட்டுன்னோ, இன்னார் பாடிய பாட்டுன்னோ, இந்த படத்தில் வந்த பாட்டுன்னோ தெரியாது. மொத தடவயா கேக்கும்போது என்னையுமறியாமல் உடம்பில் ஒரு சிலிர்ப்பு தெரிஞ்சிது....

இன்னக்கி கேக்கும்போதும் என்னால் அந்த சிலிர்ப்பை உணரமுடிந்தது....

அமெரிக்க நீச்சல்குளத்தில் இருந்து எங்கள் ஊர் தாமரைகுளத்திற்க்கு சடுதியில் என்னை அழைச்சிட்டு போன இந்த பாட்டை நீங்களும் கேட்டுபாருங்களேன் (ஏற்கனவே கேட்டுருந்தாலும்.)




டிஸ்கி : கண்ணை மூடி இந்த பாட்டயே திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருந்ததுனால நேரம் போனதே தெரியல.... படுத்திருந்த கட்டில் திடீர்ன்ணு ஆட, கண்ண தொறந்து பாத்தா life guard பெண், "Sorry Sir, the pool time is closed, you gotta leave the pool in five minutes.. " ன்னு சொல்லிட்டு போச்சு.

ம்ம்ம்... குளிக்க வந்ததுக்கு இதவாச்சும் செஞ்சிட்டு போவோம்னுட்டு ரெண்டு காலையும் தண்ணியில நனைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்....



Friday, September 3, 2010

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா திருமண வீடியோ

03-SEP-2010 அன்று நடைபெற்ற நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமண வீடியோ.

*********************************************************************************
பதிவில் indianiteracts வலைத்தல முகவரியில் உள்ள வீடியோவிற்க்கு பதிலாக indiaglitz வலைத்தல முகவரியில் உள்ள வீடீயோ இணைக்கப்பட்டுள்ளது.
*********************************************************************************

ஆறு நிமிடம் இருபத்தி ஆறு வினாடிகள் உள்ள வீடியோ தொகுப்பு.மிக தெளிவாகவும்
திருமண விழாவின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.

மராத்திய பாரம்பரிய தலப்பாகையுடன் ரஜினி.வீடியோ முழுவதும் சிந்தனைவயப்பட்டவராகவே இருக்கிறார்.நீங்களே பாருங்களேன்.




நன்றி : indiaglitz வலைத்தளம்,பதிவர் சித்ரா.

டிஸ்கி : நீங்க ஓட்டு போட்டா மத்தவங்களும் இந்த வீடியோவ பாப்பாங்க....