சென்னை, டைடல் பார்க்.வடகிழக்காய் ஓங்கி நிற்க்கும் கட்டிடத்தின் ஆறாவது தளம். மாலை நேர தேநீர் இடைவேளைகளில் அந்த 10க்கு 8 செவ்வக பகுதியை கடந்துசெல்கையில் கண்கள் அன்னிச்சையாக அவரை தேடும்.
ஸ்பீக்கர் போன் வழியே தெறித்துக்கொண்டிருக்கும் கரகரப்பான வெளிதேசத்து குரல்களுக்கு காதையும், லேப்டாப் ஸ்கிரீனுக்கு கண்ணுமாய், இடது கையால் மோவாயை தாங்கியபடி அவர்....
இன்றைக்கு பேசிவிடலாம் என்று ஒவ்வொருமுறை நினைத்தாலும் அந்த கரகரகுரல்கள் அமைதியாவதற்கான சாத்தியகூறுகள் புலப்படாமல் கடந்துசென்றுவிடுவதுண்டு.
பிறிதொருநாள் சந்திக்கவிழைந்து அனுப்பிய செய்திக்கு "i am happlied retired" என்ற பதில் ஸ்மைலியோடு வந்து விழுந்தது.
அவ்வப்போது அவர் பகிர்ந்துகொள்ளும் பரிவாதினி ஒளிபரப்பும் சங்கீத நிகழ்வுகள் பத்திய நிலைத்தகவல்கள்களோடு நின்று போனது தொடர்பு..
சமீபத்திய புத்தக கண்காட்சியில் அவரது புதிய படைப்பான "டியூப்லே வீதி" வாங்குவதாக நினைத்துக்கொண்டு டிஸ்கவரியில் அவசரகதியில் வாங்கியது "மூன்று விரல்".
அவர் திரு.முருகன் ராமசாமி அவர்கள்.
****
"மென்பொருள்துறை சார்ந்து தமிழில் வெளிவரும் முதல் நாவல்"
புத்தகத்தின் முகப்பில் அச்சிடப்பட்டிருக்கும் வாக்கியத்திற்கு மிகச்சரியாய் நியாயம் செய்திருக்கிறது நாவல்.
அதே துறையை சார்ந்தவன் என்பதாலும்,நாவலில் வரும் ஜெப்ரி போன்ற வெள்ளைக்கார பாசக்கிழவர்களோடு பணியாற்றியிருப்பதாலும்,நாவலின் மையப்பாத்திரமான சுதர்ஸனின் சொந்தஊரான மாயவரம் பகுதியை சேர்ந்தவனென்பதாலும், சுதர்ஸன் படித்த மாயவரம் தேசியமேல்நிலைப்பள்ளியில் படித்தவனென்பதாலும் கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்தது நாவல்.
பாலகுமாரனின் "அப்பம் வடை தயிர்சாதம்" புதினதுக்கு பிறகு மண்சார்ந்த,மனதுக்கு நெருக்கமானதாக உணரவைத்த புத்தகம்.முந்தையதை போலவே முழுவதும் ஒரே மூச்சில் படிக்கவைத்த நாவல்.
***
சுதர்ஸன்.... நாவலின் மையக்கதாப்பாத்திரம்.மாயவரம் கோனேரிராஜபுரத்து இளைஞன். பன்னாட்டு கம்பெனி பணியின் வேலைப்பளுவிற்க்கிடையே பக்கிங்காம் அரண்மனையையும், பிக்காடலி தெருவையும் சுற்றியபடி கழிக்கும் வாழ்க்கை சில வாரங்களில் தலைகீழாய் மாற கலிபோஃர்னியாவில் பாயசவாலியோடு பரிசாரகனாய்.....
மிக நேர்த்தியாய் நாவலுக்குள் நம்மை மென்மையாக இட்டுச்செல்லும் எழுத்து நடை.புன்முறுவலையும்,சிறு படபடப்பையும் உண்டுபண்ணும் அத்தியாயங்களின் தொடக்கமும் முடிவும்.
"நல்லவேளை ஒட்டகத்தை நடத்திக்கூட்டிக்கொண்டு எம்பி இதழ் பதித்தபடி யாரும் தட்டுப்படவில்லை" பிக்காடலி தெரு லிப்லாக் முத்தங்களை மனிதனுக்கும் ஒட்டகத்திற்குமிடையேயான ஒப்பீடு.
கிண்டியை "குயிண்டி" என்று சொல்லும் பர்மிங்காம் சர்தார்ஜி தொழிலதிபர்.
நாவலெங்கிலும் தென்படும் பகடி.
"கதர் சட்டை,கரை வேட்டி,சிகப்பு துண்டு,கருப்பு சட்டை,பச்சை துண்டு"
சுதர்ஸனின் அப்பாவுக்கு அனைத்துகட்சி ஆட்களும் பரிச்சயம் என்பதை ஒற்றை வரியில் தெரிவிக்கும் லாவகம்.
படிக்கும் வாசகனுக்கு அன்னியமாய் தெரியாமல் நாவல் முழுவதும் வியாபித்திருக்கும் தொழில்நுட்ப விவரணைகள்.
"நாளை பிள்ளை குட்டின்னு பிறந்தா, அது நாமம் போட்டுக்கிட்டு இடுப்புல பட்டுத்துணி தழையத்தழையக் கட்டிக்கிட்டு வெண்பொங்கள் சாப்பிடுமா, இல்லே விடிஞ்சு எழுந்ததும் பசியாற சிக்கன் பர்கரைக் கொண்டான்னு கேட்குமா?"
இரு வேறு கலாச்சார பிண்ணனி கொண்ட ஜோடிகளின் சிக்கல் நிறைந்த பிரச்சினையை இருவரிகளில் பட்டென்று புரியவைப்பதாகட்டும்,
"அது அது நடக்கும்போது பார்த்துக்கலாமே சார்... இப்பப்பிடிச்சு இதையெல்லாம் பத்திக் கவலைப்பட்டிருந்தா மூச்சு முட்ட ஆரம்பிச்சிடும்..."
அடுத்த பத்தியிலேயே அதற்கான தீர்வையும் முன்வைப்பதாகட்டும்.பல
இடங்களில் நாவல் வாழ்வியலை வகைவகையாய் வரிசைப்படுத்துகிறது.
நாவலின் 50வது அத்தியாயத்தில் அட்டகாசமான ஒரு பத்தி....
"வாழ்க்கை அதன் போக்கில் நகர்ந்துகொண்டிருக்கிறது" என்று ஆரம்பிக்கும் பத்தி, "நாற்காலி இடைவெளியில் மாட்டிக்கொண்டு கண்சிமிட்டும் குண்டூசி".
"கணேஷின் மூக்குக்கண்ணாடியில் பவுடர் துகள்கள்"
"இரண்டு முறை இழுத்தால தண்ணீரை பொழியும் ஃபிளஷ்.
சுதர்ஸன் கதாப்பாத்திரத்தை காலநிலையோடு ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்த 21வரிகளில்...
நாவலில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி. சுதர்ஸனை மையச்சரடாய் வைத்து இயங்கும் ரங்கா,ஜெப்ஃரி,அவ்தார்சிங்,சந்தியா,புஷ்பா,தாங்க்லோர் கதாபாத்திரங்கள்...
நாவலில் என்னளவில் குறையாக பட்ட இரு விசயங்கள்.
நாவலுக்கு சுபம்போட வலிந்து திணிக்கப்பட்டதாய் தோன்றும் கண்ணாத்தா கதாப்பாத்திரம்.
கதையோடு நியூயார்க் நகர இரட்டை கோபுரங்கள் தொடர்புபடுத்தப்பட்ட விதம். 360ம் பக்கம் வரை மிகயாதார்தமாக செல்லும் நாவல் முடிவில் கொஞ்சம் சராசரி நாவலை பிரதிபலிக்கிறது.
மிகச்சமீபமாய் படித்த புத்தகங்களில் மிகவும் பிடித்ததாகிப்போனது மூன்றுவிரல்.
**************************
ஆசிரியர் : இரா.முருகன்
பதிப்பகம் : கிழக்கு
ISBN : 978-81-8368-073-8
விலை : 215 ரூ.
**************************
0 comments:
Post a Comment