Saturday, August 29, 2015

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி.


”ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆல்ப்ஸ் மலையை பார்த்துக்கொண்டு ஜெனிவாவில் இருப்பதைவிட மின் கம்பங்கள் மீது கால் தூக்கி சிறுநீர் கழிக்கும் நாய்களை பார்த்துக்கொண்டும், ஆட்கள் வந்தால் ஒதுங்கும் மாடுகளையும் ஒதுங்காத மனிதர்களையும் பார்த்துக்கொண்டு சென்னை நகர வீதிகளில் அலையவே பிடித்திருக்கிறது”.


”நான் ஒதுங்கியும் இருக்கவில்லை, ஓய்விலும் இருக்க வில்லை. எனக்கு பிடித்தமான விஷயங்களை,பிடித்தமான மனிதர்களோடு பிடித்தமான வகையில் செய்துகொண்டே இருக்கிறேன்”


இளைஞர்(!) திரு. ”பாரதி மணி” அவர்களின் யதார்த்தம்.

”என்னமா அனுபவித்து வாழுராரு இந்த மனுஷன், ம்ம்ம்ம், நாமலும் இருக்கமே!!!!"  பொறாமையையும் அங்கலாய்ப்பையும் சேர்ந்தே கொண்டுவரும் சம்பவங்கள்,...


நாம் நன்றி சொல்லவேண்டிய இருவர் அவருடைய அக்கா "திருமதி.பகவதி கணபதி" மற்றும் அத்தான் "திரு,கணபதி".
இவர்கள் இருவர் இல்லையென்றால் நமக்கு இந்த புத்தகம் கிடைக்க சாத்திய கூறுகள் குறைவு. பாட்டையாவும் புத்தகத்தை அவர்களுக்கே
சமர்ப்பித்திருக்கிறார்.

ஆமாம், நான் ஓட்டைக்காலணா... அரையணா பேர்வழிதான்” என்று தனக்கென ஒரு லட்சுமண ரேகையை கிழித்துக்கொண்டு 50 ஆண்டுகால
தில்லி வாழ்க்கையில் தனக்கு கிடைத்த ”இரண்டரையணா” வாய்ப்புகளை புறந்தள்ளியதை விவரித்திருக்கும் “Mutton Tallow Import"

சம்பவம் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி ( கட்டுரை : நீரா ராடியாவும் நான் தில்லியில் செய்யாத திருகு தாளங்களும்).

நாகர்கோவில்-> தில்லி -> சென்னை : காலச்சக்கரத்திலேறி ஒரு சுற்று வந்த உணர்வு. பார்வதிபுரத்தில் தொடங்கி விருகம்பாக்கத்தில் முடியும் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரையிலான அனுவங்கள்.


திருவாங்கூர் சமஸ்தானத்து மன்னர் விரதம் முடிக்க சுசீந்திரத்திலுருந்து கிளம்பும் துப்பாக்கி சத்தம் முதல், ”திங்கள் கிழமை சாஸ்திரி விரதம்” வரை எத்தனை கேள்விப்படாத தகவல்களை புத்தமுழுவதும் தெளித்திருக்கிறார். சில கட்டுரைகளில் மையக்கருவை விட துணைத்தகவல்கள் படு சுவாரஸ்யம்.

”ஷேக் ஹஸீனா(பங்களாதேச பிரதமர்), அண்ணா, எம்.ஜி.ஆர் இம்மூவரையும் அவர்கள் பதவிக்கு வந்தபின் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்த்ததில்லை! நேரில் பார்க்கப்போயிருந்தால்,
என்னை அடையாளம் கண்டுகொண்டிருப்பார்களா?”

“தில்லி வந்தால் அவர் என்னையும், பெங்களூர் வந்தால் நான் அவரையும் தவறாது சந்திப்போம். சென்னையில் நிரந்தரமாக தங்கியபிறகு அவரை பார்ப்பது படிப்படியாக குறைந்துபோனது, சினிமா சான்ஸ்க்குக்காக நம்மகிட்ட நெருக்கமா இருக்குறாரோன்னு அவரு நெனச்சிடக்கூடாதில்லையா...

“சுஜாதா... சில நினைவுகள்” கட்டுரையில் வெளிப்படும் மிடில் கிளாஸ் மனப்பான்மை....

படிக்கும்போது நம்மிடையே பல உணர்ச்சி ஓட்டங்களை ஏற்ப்படுத்தும் சம்பவங்கள்.

மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் வேப்பமூடு ஜங்ஷன் மூலம் “புளியமரத்தின் கதை” சுந்தரராமசாமியானது. சு.ராவை சந்தித்து பேச வந்த க.நா.சு. பின்னாளில் தனக்கு மாமனாரானது.
மாமனாருக்கு கெட்டிச்சட்னியுடன் சரவடை வாங்கிவர வடசேரி குண்டுபோத்தி ஓட்டலுக்கு வாடகை சைக்கிளில் சென்றது. பின்னாளில் தான் செய்த மசால்வடையை மாமனார் கேட்டுவாங்கி சாப்பிடுவதை தள்ளி நின்று ரசித்தது. கா.நா.சு. அவர்களோடு பல வருடங்கள் ஒரே வீட்டில் சச்சரவுகள் இன்றி வாழ்ந்தது.... நிகம்போத்காட் இடுகாட்டில் மகனாக க.நா.சு வின் இறுதி சடங்குகளை செய்தது...

”சி.சு.செல்லப்பாவும், மௌனியும் வாய்நிறைய “மாப்பிளே” என்று கூப்பிடுவார்கள். எனது சொந்த மாமனார் ஒருதடவை கூட “மாப்பிளே”ன்னு அழைத்ததில்லை" என்று குறைபட்டுக்கொள்ளும் பாட்டையாவிற்க்கு க.நா.சு தன்னை மகனாகத்தான் நினைத்தார் என்பது
தெரியாமலிருக்க வாய்ப்பில்லை..,

”தில்லியில் நிகம்போத்காட் சுடுகாடு” : இப்புதகத்திலேயே எனக்கு ஆக பிடித்த கட்டுரை.. பாட்டையாவை தெரிந்துகொள்ள இந்த ஒரு கட்டுரைப்போதும்.

தமிழகத்திலிருந்து தில்லி செல்லும் நடிக நடிகைகள், வித்வான்கள்,எழுத்தாளர்கள் செய்யும் அலம்பல்கள் . சிவாஜியின் “பாட்டில்(குழந்தை)” பற்றிய அக்கறையான கேள்வி, எம்.எல்.வி அம்மையார் ஆசைப்பட்ட ”டீச்சர்ஸ் சாய்ஸ்” (காலி)விஸ்கி பாட்டில்....

ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் உடனான சந்திப்பின்போது சந்திரபாபுவால் ஏற்ப்பட்ட குழப்பம்,

இன்னும் பல பல விஷயங்கள்.....

”விமர்சகர் சுப்புடு” - ”நிதர்ஸன சுப்புடு”வாய் அறியபடும் “சுப்புடு சில நினைவுகள்” கட்டுரை. அரங்கேறாத நாடகத்திற்க்கு ”ஸ்டேட்ஸ்மென்” பத்திரிக்கையில் அவர் எழுதிய விமர்சனம்.

“கொஞ்சம் வெற்றிலை சீவல் அப்புறம் சுதா ரகுநாதன் கேசட்”. உங்களை அத்துவானக்காட்டில் கொண்டுவிட்டால் நீங்கள் உங்களோடு எடுத்துச்செல்ல விரும்புவது என்ன என்ற கேள்விக்கு சுப்புடு சொல்லிய பதில் என்னை நெகிழவைத்தது என்று பல வருடங்களுக்கு
முன்பு வார இதழ் பேட்டி ஒன்றில் சுதா ரகுநாதன் சுப்புடு அவர்களைப்பற்றி சிலாகித்திருந்தார்.

(சுப்புடு பற்றிய) அதே கேள்வியை பாட்டையாவிடம் கேட்டால் இன்னும் வில்லங்கமான பதில்கள் கிடைத்திருக்ககூடும்.

சத்யநாராயண் சின்ஹாவை 51வது நபராக இந்திராகாந்தியின் மந்திரிசபையில் நுழைக்க முடிந்த சாமர்த்தியம். செம்மீன் திரைப்படத்திற்க்கு தேசியவிருது கிடைக்கச்செய்ய எடுத்த முயற்ச்சிகள், “நண்பா, நண்பா” திரைப்படத்திற்க்கான சிறந்த துணை நடிகருக்கான
தேசிய விருதை  தனதாக்க்கிக்கொள்ள 200% வாய்ப்பிருந்தும் அதனை பயன்படுத்தாதது,....

“தன்னால் எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதமுடியாவிட்டாலும், எழுதிய விஷயங்களில் முடிந்தவரை முப்பரிணாமங்களையும் காட்டியிருக்கிறார்.

புத்தகத்தில் குறையாக (எனக்கு) பட்ட விசயம். பிற்பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் குறைவான சில
கடிதங்கள் மற்றும் மதிப்புரைகள்.

பாட்டையா - "Yes. you are a blessed Soul!!!!"

வடசேரி குண்டுபோத்தி ஓட்டலில் தங்களோடு ரசவடை சாப்பிட வேண்டும்..... எப்ப போகலாம்????

*************************************
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

பாரதிமணி

வம்ஸி புக்ஸ்

ISBN # 978-93-84598-06-8

விலை : ரூ. 550.
*************************************


www.vazhippokkann.blogspot.com









Monday, August 17, 2015

செம்பருத்தி...


அண்ணன் தம்பி மூவர், அவர்தம் வாழ்க்கைத்துணைகள், கொண்டதும் பெற்றதும். இவர்களை சுற்றி சுமார் 35 வருடங்களுக்கு நடக்கும் சம்பவங்கள். இவைகளே நாவலின் அடிநாதம்.

காலயெந்திரத்திலேறி சென்று கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடச்செய்யும் தி.ஜா வின் வசீகர எழுத்து மற்றும் சொல்லாடல்கள்...

கதை,கதாபாத்திரங்கள்,கால சூழ்நிலைகள் (முதற்பதிப்பு 1968) இம்மூன்றையும் ஒரு புள்ளியில் இணைத்து அதை நேர்கோடாக நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை கொண்டுசெல்வதென்பதை நினைத்து பார்த்தாலே மூச்சு முட்டிக்கொண்டுவருகிறது (தி.ஜாவின் பாணியிலே).


’உடனே புறப்பட்டு வரவும்,அவசரம்.’ தந்தி அடிக்கிறவர்கள் செய்தியை ஒரு கோடி காட்டினால் தான் என்ன? மனிதர்களை கலக்குவதற்காகவே இப்படி ஒரு கருவி,அதற்கு ஒரு இலாகா, அதற்க்கு இத்தனை ஆட்கள்!”

மனிதர்களை 24/7 அந்நிலமையிலேயே வைத்திருக்கும் தற்ப்போதைய தொழில்நுட்ப விஷயங்களை தி,ஜா எவ்வாறு கையாண்டிருப்பார்??

ரத்தத்தை கொதிக்க வைக்கும் மனிதர்கள்,சொற்கள்,நிகழ்ச்சிகள் என்று பலவற்றை பற்றி புவனாவிடம் சட்டநாதன் சொல்லிக் குமுறியதுண்டு. அவள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, அவனோடு சற்றுக் குமுறுவது போலவும் அழுவது போலவும் செய்துவிட்டுக் கடைசியில் அன்று சொன்ன மாதிரி ஒரு அற்ப விஷயத்தைச் சொல்லிச் சிரிப்பில் கொண்டு முடித்துவிடுவாள்”.


1968 - 2015 எக்காலத்துக்கும் எல்லாருக்கும் பொருந்தக்கூடிய விஷயமல்லாவாவிது!!!


இடக்கரடக்கல்” - நாவலின் ஒரு இடத்தில் கோடிட்டுக்காட்டப்படும் சொல். கமலஹாசனும் தி.ஜாவைப் படிப்பார் போல...


அசிகை” - முதல் முதலாய் கேள்விப்படும் ஒரு சொல்லாடல்.


பெரிய உடம்பு. மாநிறம். உடம்புக்கேற்ற பெரிய தலை. மொட்டைத்தலை. உடம்பெல்லாம் விபூதிப்பட்டை. கழுத்தில் ஒரு ருத்திராட்சை மாலை. இடையில் செங்கல் பார்டரில் ஒரு ஜரிகை வெண்பட்டால் கச்சம். ஒரு கட்டம் போட்ட சிவப்பு பட்டை இடையில் சுற்றியிருந்தது.வெறும் உடம்பு, ரோமம், மச்சம் ஏதுமின்றித் திருநீறும் சந்தனமுமாகச் சுருக்கமின்றிப் பளபளத்தது. நடு வயதைக் கடந்ததாலோ என்னவோ தசை மட்டும் சற்று எலும்பை விட்டுக் கட்டு கழன்றிருந்தது. லேசாகத் தொந்தி. காலிலும் கையிலும் நீள நீளமாக விரல்கள். பெரிய நகங்கள்”.


உருவத்தை உருவகப்படுத்தும் வார்த்தை ஜாலம்.


நாவலை எவ்வாறு படிக்கவேண்டுமென்று பா.ரா ஒரு விளக்கமே கொடுத்திருக்கிறார்....

http://www.writerpara.com/paper/?p=10497
"நீங்கள் எப்போதாவது வைக்கோல் போரில் சாய்ந்தபடி சுந்தர ராமசாமியின் கதைகளை வாசித்ததுண்டா? அபாரமாக இருக்கும். இதே ஜானகிராமனைப் படிப்பதற்கு ஏற்ற வாசனை, அழுக்குப் போர்வையில் கிட்டும். உள்ளதிலேயே அழுக்கான, பழைய போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு, கொட்டும் மழை நாளில் செம்பருத்தி வாசித்தால் சோறு தண்ணி வேண்டியிருக்காது. அச்சிட்ட எழுத்துகள் ஒவ்வொன்றும் போர்வையின் வாசனையை உறிஞ்சி நாசியை நோக்கிப் பீய்ச்சும். கதை புத்திக்குள் இறங்கும்போது போர்வையின் கதகதப்பு உருவாக்கியிருக்கும் வியர்வைப் பிசுபிசுப்பும் வாசனையாக உருப்பெற்று ஒரு நெடியை உருவாக்கும். ஆ, அபாரம். விவரிக்கவே முடியாது அதை".



(வைக்கோல் போர் இருந்த இடம் இப்போது கார்ஷெட் ஆகிவிட்டபடியால் எனக்கு அழுக்கு போர்வை மட்டுமே, கூடவே எங்கள் வீட்டு செம்பருத்தி மரமும்).


---------------
செம்பருத்தி
தி.ஜானகிராமன்
காலச்சுவடு
விலை :400 ரூ
---------------