Sunday, September 25, 2011

கிறுக்கல்கள் : 25-09-2011


எங்கேயும் எப்போதும்.

எங்கே நடந்தாலும் எப்போதும்போல நாம் கடந்துபோகும் வாகன விபத்தை மைய்யப்படுத்தி திரைக்கதை அமைத்ததற்க்கு இயக்குனர் சரவணனை பாராட்ட வேண்டும்.

A.R.முருகதாஸ்/ஃபாக்ஸ் ஸ்டூடியோ தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கிய படம் என்று மட்டும் நினைத்திருந்த நான் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில்
தற்செயலாக இயக்குனர் சரவணனை பார்க்க சற்றே இன்ப அதிர்ச்சி... அட நம்ம சரவணன்....

சற்றே பின்னோக்கி 2003ம் வருடத்திற்க்கு....

சென்னை அசோக் நகர் - 7வது அவென்யூ: நடன இயக்குனர் லலிதா-மணி தம்பதியருக்கு சொந்தமான அபார்ட்மெண்ட் முதல் தளம். A.R.முருகதாஸ் அஜீத்தை வைத்து இயக்கும் புதுப்படத்திற்கான கதை விவாதம் நடந்துகொண்டிருந்த சமயம். நான் வேலை பார்த்த கம்பெனி 2வது மாடியில். A.R.முருகதாஸின் அசிஸ்டெண்டுகளில் சரவணன் ஜூனியர். எப்போதும் சாந்த சொரூபியாய் அலுவலக வரவேற்பரையில் அமர்ந்திருப்பார். கடந்துபோகும் எங்கள் அலுவலக சகாக்களைப்பார்த்து ஒரு பரிச்சய புன்னகை...

எங்கள் அலுவலகம் மைலாப்பூர் பகுதிக்கு மாற்றப்பட, பிரிதொரு சந்தர்ப்பத்தில் A.R.முருகதாஸின் மற்றுமொரு அசிஸ்டெண்ட் டைரக்டரை சந்திக்கையில் அஜீத்தை வைத்து இயக்க திட்டமிடப்பட்ட படம் டிராப் ஆகிவிட்டதாகவும், அலுவலகத்தையும் மாற்றிவிட்டதாகவும்
தெரிவித்தார்.

எட்டு வருடத்திற்கு பிறகு அவரிடமிருந்து இதுபோன்றதொரு படம் உருவாகும் என்று முருகதாஸ் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை...


படத்தில் பல காட்சிகள், வசனங்கள் நச்.

குறிப்பாக,

ஜெய் பயணம் செய்யும் பேருந்து பழுதடைந்துவிட, சரி செய்தபின் கண்டக்டருக்கு கை கழுவ ஜெய் உதவும் காட்சி(பேருந்து பழுதடைந்தால் உடனே இறங்கி ஜிப்பை கழட்டிக்கொண்டே புளியமரத்தை தேடும் நமக்கு அந்த காட்சி சற்றே வித்தியாசம்).

அனன்யாவின் அக்கா பேசும் வசனம் ”இதயே என் வீட்டுக்காரு செய்திருந்தாருன்னா இன்னும் பதினைந்து வருசத்துக்கு ‘ஒன்னொட சித்திப்பொண்ணால எனக்கு ஒரு நாள் லாஸ் ஆஃப் பே’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். நிஜத்தில் சொந்த பந்தங்களிடம் பலமுறை கேட்ட அனுபவத்தால், தியேட்டரில் கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

படம் முழுதும் வியாபித்திருக்கும் அஞ்சலியின் அட்டகாசம், தியேட்டரை விட்டு வந்தும் நினைவை விட்டு அகல மறுக்கிறது.

எனக்கு தெரிந்த வரையில் தமிழில் வாகன விபத்தை இத்தனை விலாவரியாக திரைப்படுத்தியதாக தெரியவில்லை... வாகன ஓட்டிகளுக்குள் ஒரு அதிர்வலையை நிச்சயமாய் உண்டுபண்ணுகிற படம்.


கொசுறு : சரவணன், ரமணா திரைப்படத்தில் விஜயகாந்த் கல்லூரியில் கைது செய்யப்படும் காட்சியில் வகுப்பறைக்குள் மூச்சிரைக்க ஓடிவந்து மாணவர்களிடம் கைது தகவலை சொல்லும் மாணவத்தலைவன் பாத்திரத்தில் நடித்திருப்பார்.

கால் கிலோ கருப்பு புளி.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் (பயப்படாதீங்க, நடந்து முடிந்த ஃபைனலை பற்றி மொக்கைப் போடப்போவதில்லை...) ஜூனியர்-3 க்கான விளம்பரம். இரண்டு மூன்று வித்தியாச ஸ்கிரிப்ட்டில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தாலும், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் விளம்பரம்.

கால்கிலோ கருப்பு புளியும் மஞ்சள்தூளும் வாங்க கடைக்கு செல்லும் சிறுவனின் சேட்டைகள். ஒவ்வொரு வீட்டிலும் அச்சிறுவனைப்போல் ஒரு வாண்டு கண்டிப்பாக இருக்கும். அடுத்த முறை எப்போ போடுவார்கள் என்று எதிர்பார்க்க வைக்கும் விளம்பரம்.

50 ரூவா.

நாலு இஞ்ச் பைண்டிங் நோட்டில் அரை கிறுக்கலாய் எழுதி, வாங்கிய காசை பத்திரப்படுத்தியதும் பேப்பரை கிழித்து எறியும் வாய்ப்பு நம்மூர் போலீஸிக்கு இனிமேல் வாய்க்காது போல... மீனம்பாக்கம் ஏர்ப்போர்ட் சிக்னலில் பச்சை விளக்குக்கு பணிந்து விருட்டென்று கிளம்பி செல்ல எத்தனிக்கயில் காரை ஓரங்கட்ட சொன்னார் டிராபிக் கான்ஸ்டபிள். கிரெடிட் கார்ட் ஸ்வாப்பிங் மெஷின் போல் இருந்த கையடக்க பொட்டியில் கார் நம்பரை தட்டி, மளிகை கடை லிஸ்ட் போன்ற பேப்பரை கையில் கொடுத்து “ சார், ஃபைன் ரிசிப்ட் ஒரு நாள்தான் வேலிடிடி. நம்பர் பிளேட்டை சீக்கிரம் மாத்துங்க” என்றபடியே நகர்ந்தார். விவாதத்திற்க்கு தயாரான என்னை சற்றே ஆச்சரிய படுத்தியது அந்த மளிகை கடை லிஸ்ட்.

நாளைக்கு முதல் வேலயா பாக்கெட்டுல 50ரூவா மறக்காம எடுத்து வச்சிக்கனும்.

Sunday, May 8, 2011

கிறுக்கல்கள் - 08-05-2011.

இந்த சம்மரில் உடைத்த மொத்த கூலிங்கிளாஸ் எண்ணிக்கை : 4. ஒவ்வொரு முறையும் வாங்குவதும் சட்டைப்பட்டனில் மாட்டி கீழேவிழுந்து சடுதியில் உடைவதுமாய் இருந்தது. ஐந்தாவதாக வாங்கியது ஃபைபர் கிளாஸ். வாங்கியதிலிருந்து நேற்றுவரை குறைந்தது 10 தடவையாவது கீழே விழுந்திருக்கும். ஃபைபர் என்பதால் உடையவில்லை.. மாறாக இடது வலது கண்ணாடிகள் முறைவைத்து கழண்டு விழும். சரி செய்ய அருகில் இருக்கும் கண்கண்ணாடி கடையில் நுழைந்துவிடுவதுண்டு. காரணம் ????? இதுவரை எந்த கடையிலும் சர்வீஸ் சார்ஜ் வாங்கியதில்லை...
சென்னையில் பல இடங்களிலும், மயிலாடுதுறையில் இரு முறையும் சரிசெய்து கொண்டேன்.

கொஞ்சம் ஆச்சரியம் தான்... பொதுவாக ஒரு கடையில் பொருள் வாங்கும்போது வாடிக்கையாளரை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு இது போல ஃப்ரீ சர்வீஸ் செய்து கொடுப்பார்கள். ஆனால் எந்தக்கடையில் வாங்கியதாக இருந்தாலும் கண்ணாடிக்கு சர்வீஸ் சார்ஜ் வாங்குவதில்லை... ஏன்??? தெரிந்தால் சொல்லுங்களேன்....

குரோம்பேட்டை MIT மேம்பாலத்தை வழக்கம்போல் வாகனங்களை முந்திக்கொண்டு கடக்கையில் தென்பட்டது எதிரே கிராஸ் செய்த ஒரு டெம்போ டிராவலர் “நயிநார் டிராவல்ஸ்” என்ற முகப்போடு... அடடா.. என்ன ஒரு தமிழ் ”படுத்து”தல்.சொன்னவருக்கு தெரியவில்லையேனில் எழுதியவருக்காவது தெரிய வேண்டாமா???

(மாயவரத்தில் “பாப்புலர் டிஜிட்டல் பிரஸ்” என்று ஒரு அச்சகம் இருக்கிறது. இங்கு அச்சடிக்கப்படும் அனைத்து வாசகங்களும் அச்சக ஓனர் படித்துப்பார்த்த பிறகே அச்சுக்கு அனுமதி அளிக்கப்படும். கொடுக்கின்ற காசில் முன்னபின்ன இருந்தாலும் அட்ஜட் செய்துகொள்ளும் அவர் , பிரசுரிக்கப்படும் வாசகங்களிலோ/எழுத்திலோ அச்சக பணியாளர்கள் பிழை செய்திருந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார், ஒரு முறை தமிழ்நாடு அரசின் முத்திரையை ஒரு ஃப்ளக்ஸ் பேனரில் போடச்சொன்னதற்க்கு இந்த மாதிரி விசயங்களுக்கு அரசு முத்திரையை போடக்கூடாதுன்னு கடைசிவரை மறுத்துவிட்டார்.)

”அங்கிள், உங்க அம்மாவ இன்னக்கி விஷ் பண்ணீங்களா???” முன்னிரவில் சந்தித்த நண்பர் ஒருவரின் 8 வயது மகள் கேட்க, அவளே அன்னையர் தினத்தைப்பத்தியும் தான் அம்மாவை விஷ் பண்ணியதையும் தொடர்ந்துகொண்டிருந்தாள். ரசத்தில் பெருங்காயத்தை கொஞ்சம் அதிகமா போட்டதற்க்காக கடிந்துகொண்டே மதியம் சாப்பிட்டது நினைவிற்க்கு வந்தது.....

(அன்னையர் தினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒண்ணு உண்டு..... வருடம் முழுதும் தங்களுக்காக வீட்டில் சுழலும் அம்மாவை அன்னையர் தினத்தன்று சந்தோசப்படுத்த முடிவு செய்து இரவு முழுவதும் பயண ஏற்ப்பாடுகள் செய்கிறார்கள், அம்மாவோ கஷ்டப்பட்டு எல்லாருக்கும் சாப்பாடு தயார்செய்து விட்டு அசதியில் தூங்கிவிடுகிறார்... விடிந்து பார்த்தால் வீட்டில் யாரையும் காணோம், எல்லோரும் அன்னையர் தினத்தை கொண்டாட சென்றுவிட்டார்கள்...)

பலரது வீட்டில் இப்படித்தான் அன்னையை கொண்டாடி வருகிறோம், எங்கள் வீடு உள்பட...

ஜெயா டிவியில் நேற்று மாலை ”கண்ணாடி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகையில் தமிழருவி மணியனின் குரல் கேட்டு ரிமோட்டுக்கு சற்று ஓய்வு கொடுத்தேன்... சுதந்திர போராட்ட தியாகிகள்/ முன்னால் ராணுவத்தினர் பற்றியும் அவர்களுக்கான அரசாங்கச்சலுகைகள் மற்றும் அதிலுள்ள அவலங்கள் பற்றிய தொகுப்பு நேற்றைய நிகழ்ச்சி.
மலேயாவில் ஒரு கூட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகையில் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது ஆறு பவுன் வளையலை அவரிடத்தில் அன்பளிப்பாய் அளித்ததையும், தன்னையும் ராணுவத்தில் இணைத்துக்கொண்டதையும், தற்போதைய வாழ்க்கை சிரமங்களையும் 85 வயது மூதாட்டி விவரிக்க பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்ப்பாளர்கள் முகங்களில் உணர்ச்சிக் கலவைகள்... நிகழ்ச்சியின் இறுதியில் பரிசு பெற்றபோது அவர் அடித்த அந்த சல்யூட்........ அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.

Wednesday, May 4, 2011

Ctrl+Alt+Delம், சுஜாதா விருதும்....

உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து நடத்தும் சுஜாதா விருது வழங்கும் விழா....

”தேவநேயப் பாவாணர்” அரங்குக்கு வழி கேப்பவர்கள் வாயில் சுளுக்கு விழுவது நிச்சயம்... “ஆனந்த் தியேட்டர் தாண்டி ரெண்டாவது பில்டிங்ண்ணே......” அப்துல்லா போனில் வழி சொல்கயில் வேக வேகமாய் தலையாட்டிய நான் மிகச்சரியாக வழியை தவறவிட்டு, அரங்கத்தின் பெயரை (ஆத்தாடி..... நாக்கு எவ்ளோ ரோலிங் ஆவுது...),, சொல்லி வழிகேட்டு மீண்டு(ம்) வருவதற்க்குள் மதன் பாதி பேச்சில் இருந்தார்....

அரங்கு நிறைந்த கூட்டம்.... டேலிங் ஃபேன் (டேபிள் ஃபேனை சீலிங்கில் மாட்டியிருந்தால் எப்படி சொல்வதாம்???) இருந்த இடமாய் பார்த்து ஒதுங்கி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கயில் “தனக்கு பின்னால் பேச இருப்பவர்களுக்கு நேரப்பற்றாக்குறை பிரச்சினை வந்துவிடாமல்” தனது பேச்சை விரைவாக முடித்துக் கொள்வதாக பத்து நிமிடமாக சொல்லிக்கொண்டிருந்தார் மதன் .

உயிர்மை பதிப்பக சார்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ”உயிர்மை” மாத இதை புரட்டிப்பார்க்கிறேன் பேர்வழி என்று படித்து முடிக்கையில் மதனும் பேச்சை முடித்திருந்தார். அடுத்து பேச இருந்தவங்களுக்கு கொஞ்சம் நேரம் மிச்சம், எனக்கு இருபது ரூபாய் மிச்சம் (”உயிர்மை” மாத இதழ் விலை இருபது ரூபாயாம்).

அடுத்து பேச (தனது இருக்கைக்கு பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை உஷாராய் கையோடு எடுத்துக்கொண்டு)வந்த சாரு மைக் பிடித்தார். புத்தக கண்காட்சியில் அவரோட தண்ணீர் பாட்டிலை யாரோ ஆட்டய போட்டத பத்தி ரொம்ம வருத்தப்பட்டு அவரோட பிளாக்ல எழுதி இருந்ததை ”இந்த நேரத்திலே எண்ணிப்பார்க்கிறேன்...” (அய்யய்யோ நமக்கும் ஒட்டிக்கிச்சே....)

இணைய விருதுக்காக யுவகிருஷ்ணா தேர்தெடுக்கப்பட்ட விதத்தையும் , அதனால் ஏற்ப்படப்போகும்(?) கான்ட்ரவர்ஸி பத்தியும் சாரு இரண்டுமுறை குறிப்பிட, மேடையின் இடக்கோடி இருக்கையில் இருந்த யுவகிருஷ்ணா நெளிந்ததையும் பார்க்க முடிந்தது...

சாரு வழக்கம் போல லத்தீன் அமெரிக்க அறிவாளிகளையும் , மலையாளத்து மைனர்களையும் பேச்சில் இழுத்து, பேச்சை இழுத்துக்கொண்டிருக்கயில் சற்றே பார்வையை திருப்பி மேடையை ஒரு அரை வட்டம் சுற்றினேன்.


இடமிருந்து வலமாய்.... சுஜாதாவின் (வெகு நாட்களுக்குப்பிறகு திருமணத்திற்க்கு சம்மதித்த)மூத்த மகன், சாந்தமாய் அமர்ந்திருந்த சுஜாதா(அவருக்குப்பின்னால் இருந்த பேனரில் அதைவிட சாந்தமாய் சுஜாதாவின் முகம்.....)ஆர்மி ஆபீசர் தோரணயில் ஜோ.டி.குருஸ்,ஞானக்கூத்தன் ஆழ்ந்த யோசனையில் மனுஷ்ய புத்திரன், சற்றே அவஸ்தையாய் இ.பா, மோவாயை இடதுகையில் தாங்கிய எஸ்.ரா, காபி அருந்தியபடி பாரதி கிருஷ்ணகுமார், அருகிலே வண்ணதாசன் ( பாக்கெட்டில் பளபளப்பா என்னது சார்???), அடுத்ததாய் ஸ்ரீநேசன், பக்கமாய் யுவகிருஷ்ணா, இடையில் மதன், இறுதியாய் ஹரிகிருஷ்ணன்,

(அமர்ந்திருந்தவர்கள் பிறகு இடம் மாறியிருந்தாலோ, என்னைப்போல பாதியிலே நடையை கட்டியிருந்தாலோ கம்பெனி பொறுப்பாகாது...)

அப்துல்லா, கேபிள், கே.ஆர்,.பி.செந்தில், விந்தைமனிதன், எறும்பு, ”ழ” ரமேஷ் இவர்களோடு ஒரு மினி சந்திப்பு......

பல்லிடுக்கில் மாட்டியிருந்த வேர்க்கடலையை நாக்கால் நெருடியபடி (மீண்டும்) அலுவலகம் வந்து சேர்கையில் மணி சரியாய் ஒன்பது அம்பத்தி எட்டு. விழாவிற்க்கு சென்றுவருவதற்காக பத்து மணிக்கு மாத்தி வைத்திருந்த மீட்டிங்கை அட்டெண்ட் செய்வதற்காய் அவசர அவசரமாய் இருக்கையை ஆக்கிரமித்து Ctrl+Alt+Del அடிக்கையில் ஏனோ அவரின் முகம் ஞாபகம் வந்தது.....
( Ctrl+Alt+Delன் பயன்பாடு பற்றி நான் முதல் முதலாய் தெரிந்து கொண்டதே
சுஜாதாவின் கட்டுரையில் தான்...)

WE MISS YOU SIR........

2011க்கான சுஜாதா விருது பெற்றவர்கள்:
வண்ணதாசன் : படைப்பு : ”ஒளியிலே தெரிவது” (சிறுகதை)
ஜோ.டி.குருஸ் : படைப்பு : ”கொற்கை” (நாவல்)
அழகிய பெரியவன் : படைப்பு : ”பெருகும் வேட்கை” (கட்டுரை)
ஸ்ரீநேசன்: படைப்பு : ”ஏரிக்கரையில் வசிப்பவன்” (கவிதை)
மு.ஹரிகிருஷ்ணன்: படைப்பு : ”மணல் வீடு” (சிற்றிதழ்)
யுவகிருஷ்ணா : படைப்பு : ”பதிவுகள்” (இணையம்)

Monday, January 3, 2011

திரும்பி பார்க்கிறேன்....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.அப்பாடா...... இன்னக்கித்தான் நிம்மதியா திரும்பிபாக்க முடியுது.கழுத்து வலியால ஒரு வாரமா திரும்பிபாக்கவே முடியல..........


Sunday, January 2, 2011

WTC (உலக வர்த்தக மையம்) - சற்றுமுன்.....”ஆன்சைட் கால் இன்னக்கி கேன்சல்......... நியூயார்க்ல ஏதோ டெரரிஸ்ட் அட்டாக்காம்........... இன்னும் ரெண்டு மூணு நாளக்கி எந்த காலும் கிடையாது.........”
அரைநாள் பள்ளிவிடுமுறையை ரோட்டோர மழைத்தண்ணீரை எத்தித்தள்ளி அனுபவித்தப்படி செல்லும் சிறுவனின் குதூகலத்துடன் 2001ல் வீட்டுக்கு கிளம்பிய எனக்கு
தெரிய ஞாயமில்லை 2006ல் கட்டிட சிதைவுகளின் குவியலினூடே நின்றுகொண்டு என் செயலை நினைத்துப்பார்க்கப்போகிறேன் என்பது.....


சென்ற வாரம் மீண்டும் ஒரு விஜயம்............ எத்தனை முறை வந்தாலும் ஒவ்வொரு முறை வரும் கண்ணீர்த்திரையை தடுக்க முடிவதில்லை........


கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.........
புதிதாய் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வளாகம் ஐந்து பிரிவுகளை உள்ளடக்கியது....
1. ஐந்து அலுவலக கட்டிடங்கள் (ஐந்தில் ஒரு கட்டிடம் 1,776 அடியில் அமெரிக்காவின் உயரமான கட்டிடமாக அமையப்போகிறது. 2001ல் தாக்கப்பட்ட டிவின் டவர்ஸின் உயரம் 1,350 அடி. நியூயார்க்கில் இருக்கும் எம்ப்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரம் 1,250 அடி)
2. நினைவகம் மற்றும் அருங்காட்சியகம்
3. தொடர்வண்டி போக்குவரத்து மையம்
4. வணிக வளாகம்
5. கலைப்பேரரங்கம் (”Performing arts center” ஐ தமிழ்ப்படுத்த நான் படுத்தியதை பழமைபேசி மன்னிப்பாராக....)

21ம் நூற்றாண்டின் தலைசிறந்த கட்டிடங்களாக இவை இருக்கவேண்டுமென்பதில் முழுமுனைப்போடு செயல்படுகிறது கட்டுமானப்பொறுப்பேற்றிருக்கும் சில்வர்ஸ்டீன் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம்.

சிறப்பான செயல்பாட்டிற்க்காக கட்டுமான நிறுவனத்தின் தலைவர் லேரி சில்வர்ஸ்டீன் 2010ம் ஆண்டிற்க்கான சிறந்த தொழிலதிபர் விருதைப் பெற்றுள்ளார்.


உலக வர்த்தக மையத்தின் தற்போதைய நிலவரம் பற்றி தெரிந்து கொள்ள இணையதளத்தை நோண்ட, கொத்தனார் இன்னக்கி எத்தனை அடி பூச்சு பூசினார், சித்தாள் எத்தனை சட்டி மண் சலித்தார் என்கிற ரேஞ்சுக்கு விலாவரியாக அப்டேட் செய்கிறார்கள்...

{{{
புகைப்படங்கள் : என் காமிராவில் எடுக்கப்பட்டவை.
WTC பற்றிய தகவல்கள் : கூகுளாண்டவர்....
}}}

Saturday, January 1, 2011

நியூயார்க் நகரம் விழிக்கும் நேரம்..........

சென்ற வாரம் நியூயார்க் நகரின் பிரதான பகுதியில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் காலை 7 மணிக்கு இருக்க வேண்டி காலை 3 மணிக்கு எழுந்து .......முடித்து, ........டித்து...........த்து .............. து........ (நான் மட்டும் காலைல எழுந்த உடனே புதுசா என்ன பண்ணிடபோறேன்....... எல்லாரும் பண்ணுறதுதான்) காரில் அமர்ந்து ஜன்னல் வழிவந்த பனிக்காற்றை புறந்தள்ளி, இதமான செயற்க்கை வெப்பத்திற்க்கு உடம்பைக்கொடுத்து வெறிச்சோடிய நெடுஞ்சாலையில் விரட்ட ஆரம்பித்தேன், துணையாய் காதின்வழி நரம்பில் ஊடுருவும் கதிரியின் சாக்ஸபோன்...............


நியூயார்க் நகரின் ஐந்தாவது அவென்யூவில் காரை சொருகி, ஆறாவது அவென்யூ நோக்கி நடக்க ஆரம்பிக்கையில் மணி 6.30. பலமுறை நியூயார்க் சென்றிருந்தாலும் பின்னிரவு கேளிக்கைகள் முடிந்து, நகரம் சற்றே சாவகாசமாய் இருக்கும் காலை நேரத்தில் செல்வது இதுவே முதல் முறை.

வந்த வேலை முடித்து சற்றே ஆசுவாசமாய் தெருக்களில் நடக்க தொடங்கினேன் கழட்டிவிட்ட எருமை போல (நன்றி விக்னேஸ்வரி). கழுத்தில் கேமராவுடன் நிதான நடையில் தெருக்களை விழுங்கி தனிமையில் சுத்துவதில் தனி சுகம்.

டைம் ஸ்கொயர் பகுதிசைக்கில் கேப்பில் காரை நுழைக்கும் நம்ம ஊர் ஆட்கள். நியூயார்க்கில் ஓ(ட்)டும் பெரும்பாலான டாக்ஸி-டிரைவர்கள் இந்தியர்கள், கூடவே நமது எல்லைக்கோட்டவர்களும்...
கூட்டங்கூட்டமா கிளம்பிட்டாய்ங்க.........

ஆரவார தெருக்கள் அமைதியாய்.............
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகும் “ராக்-பில்லர் சென்டர்”