டேய்........ பேட்டரி மூணு மணி நேரமா சார்ஜ் ஆயிடுச்சி.... முத போட்டாவா யென்ன யெடு..........
முண்டா பனியனுடன் முறைப்பாய் போஸ் கொடுத்துக்கொண்டிருந்த நண்பனை புதிதாய் வாங்கிய நிக்கான் கேமராவில் விழுங்கினேன்.
’கிளிக்’............. இந்த சத்தம் காதில் ரீங்காரமிடும்பொதெல்லம் மனசு அவரை நினைத்துகொள்ளும்.....
அவர்................. மாயவரம் நியூ போட்டோ ஸ்டூடியோவின் ஆஸ்தான போட்டோகிராபர் மற்றும் ஸ்டூடியோவின் 'ஆல்-இன்-ஆல்'.
சின்ன வயசில் முதல் முறையாய் போட்டோ எடுக்க என்னயும், அக்காவயும் அம்மா அங்கு கூட்டி செல்கையில் புது பேண்ட் சட்டை வாங்கி கொடுத்தால்தான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன்னு அடம்பிடித்த என்னை பளீர்ன்னு முதுகில் அம்மா ரெண்டு போட "புள்ளய அடிக்காதம்மா, இங்க வாடாப்பா"ன்னு என்னை அருகில் இழுத்து மடியில் அமர்த்தி தனக்காக வாங்கி வைத்திருந்த டீயில் பன்னை நனைத்து வாயில் ஊட்ட அழுகயை நிறுத்தினேன் நான்.
ஒழுகிய மூக்கை நாலு முழ வேட்டியின் உள்முனையில் துடைத்தவர் "பாரு, அழுததுல பௌடரெல்லாம் அழிஞ்ச்சிபோச்சி"ன்னு சொல்லிக்கிட்டே பௌடரை மூஞ்சில் அப்பிவிட்டு அக்காவின் பக்கத்தில் இருந்த உருலையில் என்னை தூக்கி நிப்பாட்டி ”சிரிடா ராஜா, ஆங்..... இங்க பாரு.......... ஆங்.............."
’கிளிக்’...........................
(நான் கேட்ட முதல் ‘கிளிக்’ சத்தம்.... இன்னக்கி தான் கேட்டது போல இருக்கு... இடையில் தான் எத்தனை வருடங்கள். பீரோவில் இன்றும் பத்திரமாய் இருக்குறது அந்த போட்டோ..........)
அக்டோபரில் லீவில் ஊருக்கு போனபோது நியூ போட்டோ ஸ்டூடியோவை கடந்து போக எத்தனிக்கயில் ஏதோ ஞாபகம் வந்தவனாய் சட்டென்று உள்ளே செல்ல, முன்னறை கல்லாப்பெட்டியில் இருந்த ரெட்டைநாடி சாரீரம் "உள்ள போங்க சார்"ன்னு கைகாட்ட, கருநீல துணியை விலக்கியபடியே இருளறைக்குள் பிரவேசித்தேன் நான்.
"கணுக்கால் பக்கம் கொசுவத்த சரிபண்ணிவிட்டுக்கம்மா, ம்ம்.......... இப்ப சரியா இருக்கு, அப்படியே நிமுந்து பாரு..... ம்..... தலய லேசா இந்த பக்கம்.......
ஆங்....... போதும் போதும்" என்றவாறே போகஸ் லைட்டுக்கும் அந்த பெண்ணிற்க்கும் இடையே கபடி ஆடிக்கொண்டுருந்தார் சாமி.
"சாமி.......... போட்டோ படம் யெப்ப ரெடியாவும்?"
கல்யாணி கவரிங் நெக்லஸை கழட்டிக்கொண்டே கேட்ட பெண்ணிடம் "ஏழே முக்கால் பஸ்ஸுலதான ஊருக்கு
போற, வாங்குற சாமானெல்லாம் வாங்கிட்டு பஸ்ஸ்டாண்டுக்கு போறப்போ வந்து வாங்கிட்டு போ........ அதுக்குள்ள போட்டு வக்கசொல்லுறேன்".
"திரும்பி வரும்போது மணிக்கூண்டுக்கிட்ட புருஷோத்தம இருப்பான், அவன்கிட்ட நெக்லஸை கில்ட் புடிச்சிக்க, போட்டா யெடுக்குறப்ப லைட்டு
வெளிச்சத்துல அங்கங்க கருப்பா தெரியுது. வேணும்னா கில்ட் புடிச்சதுக்கப்புறம் இன்னொன்ணு எடுத்துக்கலாம்."
சுவற்றுப்பக்கம் திரும்பி வேட்டியை உதறி இடுப்பில் இறுக்கியவர் "உங்களுக்கு யென்ன போட்டோ தம்பி?" என்றவரிடம் போட்டோயெடுக்க உள்ளே நுழையவில்லையென்றாலும் அந்த ரூமில் அவருடன் மேலும் சில நிமிடங்கள் இருக்க விரும்பி "பப்.......பாஸ்போட்" என்றேன் .
அதே சுறுசுறுப்பு, அதே நாலு முழம் , அதே வெற்று மார்பு,வேட்டியில் சுருட்டிய மூக்குபொடி டப்பா, சற்றே தளர்ந்த உடல்.
எங்கள் வீட்டில் அனேகமாக அனைவரும் இந்த ரூமில் நின்று, சிரித்து,பல்மூடி, கைகட்டி அவர் சொன்னதை தட்டாமல் செய்திருக்கிறோம்.
உறவினர் ஒருவர் அதே தெருவில் ஸ்டூடியோ வைத்திருந்தபோதும் எங்களுக்கென்னவோ இந்த ரூமின் மேல் ஒரு இனம்புரியாத ஒட்டுதல்.
போட்டோ எடுத்தப்பின் முன்பகுதிக்கு வந்து கம்யூட்டரில் அமர்ந்திருந்தவரிடம் "தம்பிக்கு பாஸ்போட் நாலு காப்பி" என்றவாறே கேமராவை கொடுத்துவிட்டு மூலையில் இருந்த தூக்குவாளியை எடுத்தவரிடம் "சாமி........ நேத்து வாங்கிட்டு வந்த தோசயில வச்சிருந்த தேங்கா சட்டினி ஊசிப்போயிருந்துது..........
தக்காளி சட்டினி வச்சி கட்ட சொல்லுங்க..........." கம்யூட்டர் ஆசாமியின் குரலுக்கு தலையாட்டியவர் என்னிடம் திரும்பி "தம்பி, நீங்க யெங்கயும் கட கண்ணிக்கு போகணும்னா போயிட்டு ஒரு அர மணி நேரத்துல வாங்க, போட்டு வச்சிருப்பாரு வாங்கிக்கலாம்". "யப்பா, தம்பி அவசரமா போட்டோ யெடுக்க வந்துட்டு போல, பிரிண்ட் போடுறதுக்கு முந்தி கொஞ்சம் சேவிங் பண்ணிடு".
சாப்பாடு வாங்க செல்லும் சாமியை பார்த்தபடியே படியிறங்கினேன் நான்.