திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தங்களுடைய பதிவு ஒன்றில் மண்வெட்டியை பற்றி எழுதியிருந்தீர்கள். நெடுநாட்களாய் என் மனதில் இருக்கும் ஒரு கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயன்று இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. தாங்கள் மண்வெட்டியை அவதானித்து எழுதியிருப்பதால் தங்களிடம் கேட்கத்தோன்றியது. விடை கிடைத்தால் மகிழ்ச்சி. “இல்லை என்ற பதில்” கிடைத்தாலும் மகிழ்ச்சியே… ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (தற்போதைய தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்) வயல்வெளிகள் மற்றும் கட்டுமானம் செய்யும் இடங்களில் பயன்படுத்தப்படும் மண்வெட்டியை தாங்கள் கண்டிருக்கக்கூடும். சோழமண்டலத்தின் மருமகனானதால் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். மண்வெட்டியின் கைப்பிடி சற்றே நீளமாகவும், இலைக்கும் கைப்பிடிக்கும் உள்ள இடைவெளி சற்றே அதிகமாகவும் இருக்கும். ஆனால் மற்றப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் மண்வெட்டியின் கைப்பிடி நீளம் குறைவாகவும், இலைக்கும் கைப்பிடிக்கும் உள்ள இடைவெளி குறைவாகவும், மிகவும் குனிந்து பயன்படுத்த வேண்டிய நிலையிலும் உள்ளதே, இதற்க்கு ஏதாவது தனித்துவ காரணங்கள் உண்டா? ஆம் எனில், தெரிவிக்க இயலுமா?
நட்புடன்,
யோகேஸ்வரன்
வழிப்போக்கன் – யோகேஷ்
http://vazhippokkann.blogspot.in/
அன்புள்ள யோகேஸ்வரன்
ஆம், அந்த வேறுபாட்டைத்தான் நான் பதிவுசெய்திருந்தேன் தஞ்சையிலும் நாகர்கோயிலிலும் உள்ள மண்வெட்டி ஒரேபோலத்தான் இருக்கும். கோயில்பட்டி சிவகாசி மண்வெட்டிதான் அலகுக்கும் பிடிக்குமான இடைவெளி குறைந்து குனிந்து வேலைசெய்வதுமாதிரி இருக்கும் தஞ்சைக்கும் நாகர்கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை இங்கே மண் களியாக இருக்கும் என்பதுதான். நெல்விவசாயம் அதிகம். களிமண்ணை நின்றபடி வெட்டி நெம்பி புரட்டவேண்டும். அதற்காகத்தான் இந்த மண்வெட்டி கோயில்பட்டி கரிசல் பகுதிகளில் மண் குமுகுமுவென்றுதான் இருக்கும். மிளகாய் போன்ற புஞ்சை பயிர்களே அதிகம். மண்ணில் களையைச் செதுக்கிப்போடத்தான் அதிகமும் மண்வெட்டியைப் பயன்படுத்துகிறார்கள். வாய்க்காலில் நீர் அடைக்கவும். அதற்கு அந்த மண்வெட்டி வசதியானதாக இருக்கலாம்.
ஜெ
{{
மண்வெட்டி பற்றிய நமது சந்தேகமும் அதற்கு திரு.ஜெயமோகன் அவர்கள் அவருடைய தளத்தில் அளித்த பதிலும்.
http://www.jeyamohan.in/?p=40339
}}
Wednesday, October 16, 2013
Thursday, September 12, 2013
'வீடு திரும்பல்' மோகன்குமாரின் "வெற்றிக்கோடுகள்" : ஒரு விமர்சன பார்வை...
படிகளின் உயரம் எப்போதும் அளவோடு இருத்தல் வேண்டும். உயரம் அதிகமாக இருந்தால் ஏறுவதை தவிர்த்துவிடுவோம், குறைவாக இருக்கும் பட்சத்தில் தாண்டிச்சென்றுவிடுவோம். மோகன்குமார் வெற்றிக்கோடுகள் புத்தகத்தின் படிகளை சரியாகவே நிர்ணயத்திருக்கிறார்.
படித்து முடிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்களை முடித்த பிறகே புது புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற விரதத்தை சற்றே தளர்த்த வைத்தது மோகன்குமாரும், சுரேகாவும். அடைமழையில் டிஸ்கவரி சென்று மோகனையும் சுரேகாவையும் பையில் அடைத்தபிறகும் மனசு அலைபாய,ஏ.கே.செட்டியாரும், சு.காவும், சு.ராவும்,க.நா.சுவும்,வண்ணநிலவனும் இடம் பிடித்துக்கொண்டார்கள்.
வீடு திரும்பியதும் கையில் எடுத்தது "வீடு திரும்பலின்" வெற்றிக்கோடு புத்தகத்தை. அதைப்பற்றி கொஞ்சம்....
புத்தக விபரம் :
வெற்றிக்கோடு
'வீடு திரும்பல்' மோகன்குமார்
அகவொளி பதிப்பகம்
விலை : 80 ரூ.
85 பக்கங்கள் (முன்னுரை மற்றும் முடிவுரை தவிர்த்து). 19 கட்டுரைகள். சட்டென்று ஆரம்பித்து சடுதியில் முடியும் எழுத்து நடை.
"உனக்கு புத்திமதி சொல்லுற அளவுக்கு நான் பெரிய அப்பாடக்கர் இல்லை, எனக்கு நடந்ததை,நான் பின்பற்றுவதை எழுத்தாக்கியிருக்கிறேன், இஷ்டமிருந்தா படி, இல்லாட்டி போயி புள்ளகுட்டிகள படிக்க வை" என்று முன்னுரையிலேயே முத்தாய்ப்பு வைத்திருக்கிறார்.(மோகனின் மைண்ட் வாய்ஸ் : நாங்கள்ளாம் எவ்வளவு பாத்திருக்கோம்!!!!!!!)
பெரும்பாலான கட்டுரைகள் நம்முடைய வாழ்க்கையை இடுப்பில் கேமிராவைக்கட்டிக்கொண்டு படம்பிடித்தது போல இயல்பாய்...
வெள்ளிக்கிழமை போட்டுக்கிற சட்டையை ( வியாழக்கிமை மழை வந்துட்டா என்ன பண்ணுறது??) புதன்கிழமையே சுவைச்சி ரெடி பண்ணி வைக்கிற முன் ஜாக்கிறதை முத்தண்ணா பார்ட்டி நான், சில கட்டுரைகளை படிக்கையில் சிரிப்பதை தவிர்க்க முடிவதில்லை.
புத்தகத்தில் பிடித்த சில பகுதிகள் :
"உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை நீங்கள் திரும்பி பார்க்கவும், உங்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒரு சில விஷயங்கள் கற்றுத்தரவும் செய்யுமானால் இந்த புத்தகம் தன் கடமையை செய்துவிட்டது என்று அர்த்தம்".
"முதலில் ஒருவர் செய்த கண்டுபிடிப்பை அடுத்து மெருகேற்றியவர் முதலாம் நபரைவிட அதிக பிரபலம் ஆனது நடந்துதான் உள்ளது".
படிக்கையில் சத்துணவு திட்டத்தை அமுல்படுத்திய காமராஜரும், அதனை பிரபலப்படுத்திய எம்.ஜி.யாரும் நினைவுக்கு வருகிறார்கள்.
"முக்கிய பொருள்களை எப்போதும் குறிப்பிட்ட இடத்தில் வைப்பதும் அங்கிருந்து தேவையான போது உடனே எடுப்பதும் மிகச்சிறிய, ஆனால் நம் நேரத்தை நிறைய சேமிக்கிற விஷயம்".
நான் சிரத்தையுடன் கடைபிடிக்கும் விஷயம் இது. 'பேக்கப் & கிளீனிங் ப்ராசஸ்' அலுவகத்துக்கு மட்டுமல்ல,வீட்டுக்கும் சேர்த்துதான்.
நிறைமாத கர்ப்பிணி போல எப்போதும் காட்சியளிக்கும் பர்ஸிலுள்ள தேவையில்லாத விஷயங்களை நாம் கடைசியாக பிரித்தெடுத்தது எப்போது???
"மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் உடல் கஷ்டத்தோடு இந்த பிரச்சினை முடியும் ( நான் இன்சூரன்ஸ் ஏஜன்ட் இல்லை என்பதறிக..)" "உனக்கேன் இவ்வளவு அக்கறை" என்று நாம் யாரும் கேட்டுவிடக்கூடாதல்லவா?
"வெற்றி பெற,முன்னேற,மகிழ்ச்சி கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு.அது நமக்கு மட்டுமே நடக்க வேண்டும் என நினைப்பது மூடத்தனம்.வாழ்க்கையும், வாய்ப்புகளும் அனைவருக்கும் போது."
"உங்கள் குடும்பத்தார் வலி,கண்ணீர் உணராது நீங்கள் இமயமே தொட்டாலும் அதில் எந்த பயனுமில்லை."
"கடவுளாலும் முடியாத விஷயம் ஒன்று உண்டு. நடந்ததை மாற்ற அவராலும் முடியாது! "
சில சிறு குறைகள் :
செல்ல அம்மாவிற்க்கு சமர்ப்பணம் செய்தவர், தாயாரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.
"பதிவு" என்ற வார்த்தையை "கட்டுரை" என்று மாற்றியிருக்கலாம், பதிவர் அல்லாதவர்கள் புத்தகத்தை படிக்கும்போது சிறு குழப்பம் ஏற்படுகிறது. என்னிடமே மேற்கண்ட கேள்வி இருவரால் கேட்கப்பட்டது.
ஒரு சில எழுத்து பிழைகள் இருப்பினும் கட்டுரைகளின் சாராம்சம் அப்பிழைகளை புறந்தள்ளிவிடுகிறது.
*************************************************************
நீடாமங்கலத்துக்காரரின் மனதில் நீங்கா நினைவாய் நீண்ட நாட்களுக்கு நிலைக்கப்போகிறது இந்த (வெற்றி) கோடு.
சக பதிவராக, சக சோழமண்டலத்துக்காரனாக மோகனை வாழ்த்துவதில் ஒரு தன்னிறைவு ஏற்படுகிறது...
இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள் நண்பரே....
*************************************************************
"வெற்றிக்கோடு" - செட்டியார்கடை தேன்மிட்டாய்.
*************************************************************
Friday, March 8, 2013
ஒரு புளியமரத்தின் கதை.
ஒரு புளியமரத்தின் கதை : என் பார்வையில்...
ஒரு புளியமரத்தை கதைக்கருவின் நாயகமாக ( அஃறிணை???) கொண்டு இப்படி ஒரு படைப்பை உருவாக்க முடியுமா? என்று எல்லோருக்கும் உருவாகும் சந்தேகம் என்னுள்ளும் வந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லைதான்.
கதையின் ஆரம்ம கட்டங்களில் பனிப்படலமாய் மனதில் உருவகம் பெற்ற புளியமரம்(வேப்பமரம்?), கொப்ளான் வெட்ட முயற்சிக்கையில், தாமோதர ஆசானுடன் நானும் மனதினூடே போராடுகையில் கொஞ்சமாய் பதிய ஆரம்பித்து, தேர்தல் நேரங்களில் எப்போது முடுவுகட்டுவார்களோ என்ற பதபதைப்புடன் வாசிப்பை தொடர்ந்து, தாய்தடியில் கூலி ஐய்யப்பனால் விஷம் வைக்கப்படும்போது தொண்டை எச்சில் காய்ந்து போகிறது.
எல்லாம் முடிந்து மரம் பட்டுப்போய் நிற்கையில்,மரத்தை உருவகப்படுத்த மனமின்றி புத்தகத்திற்க்கு சற்று ஓய்வு கொடுக்க எண்ணி மூடி வைக்கையில் கண்ணில் பட்டது புத்தகத்தின் கடைசிப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பட்டுபோன மரத்தின் படம் ( ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்).
பழக்கப்பட்டிறாத பல வார்த்தைகளை சுகாவின் வேணுவனம் மற்றும் தாயார் சன்னதியில் பரிச்சயப்படுத்திக்கொண்டது சௌகரியமாகவே இருந்தது.
சக்கரம் என்ற வார்த்தைக்கான சரியான அளவுகோலை புத்தகத்தின் கடைசி பக்கத்தில் தெரிந்துகொள்கையில் சற்றே சந்தோசம்.
புரியாத வார்த்தைகள் வந்து விழுகையில் அர்த்தம் தெரியவில்லையே என்ற கவலையைவிட, இவ்வளவு வட்டார வழக்கு சொற்கள் வழக்கொழிந்து போய்விட்ட கவலையே மேலோங்கியது.
"கிண்டல் செய்வது" என்ற பதம் எனக்கு தெரிந்து சமீகமாக வழக்கழிந்து வரும் சொற்களில் ஒன்று. சென்னை பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுக்கொண்டிடுந்த "கலாய்ப்பது" என்ற வார்த்தை தற்போது எல்லா பகுதிகளிளும் சொல்லப்படுகிறது.
சுந்தர ராமசாமியின் முதல் பதிப்பு(1966) முன்னுரையில் சொல்லியிருக்கும், கூலி ஐய்யப்பனின் உறவாக கொண்டு செல்லப்படவேண்டிய பொரிகடலைக்காரியின் (கதா)பாத்திரத்தை கதையின் போக்கில் இடையிடையே நானே பொருத்திப்பார்த்ததுண்டு.
ஊருக்கு செல்கையில் அருகருகே நின்றுகொண்டு கிளைகளால் இழைந்து கொண்டிருக்கும் கொல்லைப்புற புளியமரத்தையும், வேப்பமரத்தையும்(எங்கள் வீட்டு சாமி மரம்) ஆசையாய் தடவிப்பார்க்க வேண்டும்.
ஒரு சந்தேகம் : சு.நா. தனது ஐந்தாவது பதிப்பின் முன்னுரையில், கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் புளியமரம் தனது ஊரில் இருந்த ஒரு வேப்பமரம் என்று தெரிவிக்கிறார். அப்புறம் ஏன் கதையில் வேப்பமரம்ன்னு எழுதாமல் புளியமரம்ன்னு எழுதியிருக்கிறார்??? இதுவும் ஒரு வழக்கு சொல்லா இருக்குமோ? இல்லாட்டிஏதாவது வேண்டுதலா இருக்குமோ?????
******************************************
தலைப்பு : ஒரு புளியமரத்தின் கதை.
நூல் ஆசிரியர்: திரு.சுந்தரராமசாமி.
பதிப்பகம் : காலச்சுவடு.
விலை : 175
IBSN # : 978-81-90080-10-1
******************************************
Subscribe to:
Posts (Atom)