Sunday, February 15, 2015

இரயில் புன்னகை.



1982-84ல் வெளியான 8 கதைகளின் தொகுப்பு.

”கச்சேரிக்கிடையே என்னத்த வாயில போட்டுக்கிறாருன்னு போயி பாத்திட்டு வா” அரியக்குடியின் தோடியில் லயிக்காமல் அவரின் தொண்டையில் கவனம் குவித்த சுஜாதாவின் மாமா, தன்னுடைய தொல்காப்பிய மேற்கோள்களை புறந்தள்ளி மூச்சிரைப்பை முக்கியமாக்கிய எழுத்தாள நண்பர் என தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில் ஆரம்பிக்கிறது அவதானிப்பு பற்றிய சுஜாதாவின் முன்னுரை,

முதல் கதை “இரயில் புன்னகை”. தமிழக இளைஞனொருவன் பம்பாயின் ஜனத்திரலில் மெற்க்கொள்ளும் ஒரு ரயில் பயணம், சற்றுமுன் பார்த்து புன்னகைத்த அந்த தமிழ் முகம் தண்டவாளத்தில் சடமாய் கிடக்க, அலைகழிக்கும் அன்றாடத்தை நொந்தபடி முன்னிட்டு அலுவலகம் செல்லும் சாமிநாதன் கதாபாத்திரம். மனம்பொறுக்காமல் இறந்தவனின் வீடு நோக்கி விரையும் சாமி, இறந்தவனின் வீடு எப்படியும் இன்னும் சில நாட்களில் காலியாகிவிடும் சந்தோசத்தில் அடுத்த ஆள் தேட ஆரம்பிக்கும் அபார்ட்மெண்ட் மேனேஜர். “இறந்தவனுக்கும் உனக்கும் என்ன உறவு?” மேனேஜரின் கேள்விக்கு புன்னகையை பதிலாக தரும் சாமிநாதன்.

குதிரை கடித்ததால் கிருஷ்ணசாமி ”குதிரை கிச்சாமி” ஆகும் ”குதிரை” கதை.

150 பிராங்க் காட்டன் சட்டையைவிட சல்லிசாக 250ரூவாய்க்கு விழுப்புரத்தில் வாங்கிவந்த ”பாரீஸ் தமிழ்பெண்” பெண்குழந்தை.

ஊர்தோரும் தேதிவாரியாக விஜயம் செய்யும் டாக்டர் ராஜ், அவரை பேட்டி காண குறுக்குவழியில் செல்லும் நிருபர். லேகியத்தை வாழ்க்கைக்காக வரித்துக்கொண்டிருந்தாலும் M.A இங்கிலீஷ் படிச்சதையும், இயற்க்கை வைத்தியத்துக்கு தூதுளங்கொடி தேடியலைந்ததையும் ”முழு வைத்தியன்” கதையில் அசுரத்தையாய் விவரிக்கும் டாக்டர் ராஜ்.

”அரை வைத்தியன் ” கதையில் தொழில்தர்மம் பேசும் டாக்டர் சீனிவாசராவ்.

பாதியில் நிறுத்த மனசில்லாமல் பல ஸ்டாப்பிங் தாண்டி இறங்க வைத்த புத்தகம்...


இரயில் புன்னகை.
சுஜாதா.
விசா பப்ளிகேஷன்ஸ்..
ரூ.45.

நகரம்.



1971-72 காலகட்டங்களில் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான 14 கதைகளின் தொகுப்பு.

புத்தகத்தின் தலைப்பான “நகரம்” கதை நகரத்தின் அரசாங்க ஆஸ்பத்திரி ஒரு கிராமத்து பெண்ணுக்கு எப்படி அன்னியப்பட்டு இருக்குறது என்பதை அழகாய் உணர்த்துகிறது. 40 வருடம் கழித்தும் நம்மால் இயல்பாக கதைக்களத்தையும் அதன் சூழலையும் நிகழ்காலத்தில் பொறுத்திப்பார்க்க இயலும்.

வாத்தியார் வாத்தியார் தான்....


நகரம்.
சுஜாதா.
விசா பப்ளிகேஷன்ஸ்.
ரூ.75.

சஞ்சாரம்.



ஆவணப்படமாகவோ, ஆராய்ச்சிக்கட்டுரையாகவோ வந்திருக்க வேண்டிய கரு. தன்னுடைய களப்பணியினாலும், தேணுகா, பி.யெம் சுந்தரம் முதலிய இசை விமர்சகர்கள் வழி திரட்டிய தகவல்கள் மூலம் ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவின் கலைஞருக்கு இயல்பாய் கிடைக்கும் மரியாதையும் கவுரவமும் கரிசல்மண்ணின் கலைஞர்களுக்கு மறுக்கப்படுவதையும் அவர்கள் உதாசீனப்படுத்தப்படுவதையும் கொஞ்சம் அதிகமான புனைவுகள் சேர்த்து நாவலாக்கியிருக்குறார் எஸ்.ரா.


பக்கிரி, ரத்தினம். கரிசல்மண்ணின் நாதஸ்வர கலைஞர்கள். கோவில் திருவிழாவிற்க்கு வாசிக்க செல்லும் இவர்கள், முதல்மரியாதை சம்பந்தமாக இரு ஊர்காரர்களுக்கிடையே ஏற்படும் தகறாரில் இழிவாக நடத்தப்படுகிறார்கள். ஆத்திரப்படும் பக்கிரி கோவில் பந்தலை தீ வைக்க, பக்கிரியும் ரத்தினமும் ஊர் ஊராக தலைமறைவு வாழ்கிறார்கள்.

பக்கிரியின் நினைவலைகளில் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரை நாவல் விரிகிறது. ஆங்காங்கே நிறைய கிளைக்கதைகள். ஒரு கட்டத்தில் இந்த கிளைக்கதைகள் அசுவாரஸ்யமாக பக்கங்களை நிரப்புகின்றன.

கரிசல்மண்ணின் வாத்திய கலைஞர்களின் ஆதங்கங்களை பதிவுசெய்திருக்கும் வகையில் இந்நாவல் முக்கியத்தும் பெறுகிறது.


சஞ்சாரம்.
எஸ்.ராமகிருஷ்ணன்.
உயிர்மை பதிப்பகம்.
ரூ.370.

தண்ணீர்.


”அசோகமித்திரனின் கதைகளில் யாரும் சண்டையிடுவதோ, உரக்க விவாதம் செய்துகொள்வதோ இல்லை. மத்தியதர மனிதர்கள் தங்கள் நெருக்கடிக்குள் உழன்றபடியே மீட்சிக்காக காத்திருக்கிறார்கள்,”.

”100 சிறந்த சிறுகதைகள்” தொகுப்பில் அசோகமித்திரனின் சிறுகதைகள் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரை.

“தண்ணீர்” நாவல் எஸ்.ராவின் முன்னுரையை வழிமொழிகிறது. மத்தியதர சென்னை மக்களின் அன்றாட வாழ்வில் தண்ணீரை மையமாக வைத்து நடைபெறும் சம்பவங்கள், அதிகார தோரணைகள், அத்துமீறல்கள் என அன்றாடங்களை அழகாக எழுத்தில் காட்சிபடுத்தியிக்கிறார்.

1971ல் எழுதப்பட்டிருந்தாலும் 2015லும் நம்மால் கதையின் சூழ்நிலைகளுக்குள் பொருத்திக்கொள்ள முடிகிறது.

தண்ணிலாரியின் ஹாரன் சத்தம் கடவுளின் அசரீரியாய் கேக்கும் பரபரப்புகள் நிறைந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் வாழும் ஜமுனா அவரது தங்கை சாயா. இவர்களிருவருக்கிடையில் நடக்கும் சம்பாஷணைகள்,வருத்தங்கள், சந்தோஷங்கள்.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழவிரும்பும் ஜமுனா. தன்போக்கிற்க்கு இழுத்துபிடிக்கும் சாயா.

முடிவற்று முடியும் நாவல்....

(சில வாரங்களுக்கு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் தண்ணீர் நாவலைத்தழுவி திரைப்படம் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது)


தண்ணீர்
அசோகமித்திரன்
கிழக்கு பதிப்பகம்
ரூ.115.