Saturday, January 31, 2015

வாடிவாசல் : சி.சு.செல்லப்பா


1950களில் எழுதப்பட்ட கதை.

தனது தந்தை செல்லியன் குடல் சரிந்து இறந்துபோக காரணமான வாடிபுரத்து சமஸ்தானத்து காளை ”காரி”யை அடக்குவதற்காக வாடிவாசலில் காத்திருக்கும் பிச்சி, செல்லியனின் வீரதீரபிரதாபங்களை அவரின் மகனென்று தெரியாமல் பிச்சியிடமே விவரிக்கும் உள்ளூர்கார கிழவர்.

முதலாவதாய் திட்டிவாசலை தாண்டி ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்கும் செல்லாயி கோயில் காளை, இருபுறமிருந்தும் பாய்ந்து அணையவருபவர்களை சீரி, திமிலை சிலிர்ப்பியபடி ஆற்றுமணல் நோக்கி ஓட்டமெடுக்கும் காளைகள்.

அணைமரத்தோடு நெஞ்சணைத்து “காரி”யை எதிர்பார்த்தபடி பிச்சி, மச்சானின் எண்ணம் நிறைவேற தோள்கொடுக்க அருகில் மருதன். பிச்சியின் உறுதியை குலைக்கும் வகையில் கேலிசெய்து கொண்டு எதிர்புறம் நிற்க்கும் முருகன்.

“காளைய அணைச்சி ரெண்டுபவுன் சங்கிலியையும் உருமாபட்டயயும் உருவாம இவ வூரு போயி சேரமாட்டா போலருக்கே” என்று நினைத்தபடி பதட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும் வாடிபுரத்து ஜமீன்.


61 பக்க குறுநாவலில் மாடுபிடி நிகழ்வையும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் விவரித்திருக்கும் விதம் அரை நூற்றாண்டு கடந்தும் வசீகரிக்கிறது.

”ஜல்லிக்கட்டு நடக்காததுனால நாங்கள்ளாம் ரொம்ப அப்செட்டா இருக்கம், கவர்மண்ட் இந்த பிரச்சினைய ஃபாஸ்ட்டா சால்வ் பண்ணணும்....” கேமரா லென்ஸை கூச்சத்துடன் பார்த்தபடி வருத்தத்தை வரவழைத்து பேசும் 20 வயது இளைஞன்.

எதோ ஒரு சேனலில் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக நடைபெறும் விவாதத்தை அசுவாரஸ்யமாய் கடந்து போவது மட்டுமே வரும்காலங்களில் நமக்கு கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும்.....


{{ ரொம்ப வருஷமா எங்கூருக்கு பக்கத்துல காணும்பொங்கலன்னைக்கி நடந்துகிட்டு இருந்த மாட்டுவண்டி பந்தயத்தயும் இந்த வருஷத்திலருந்து நிப்பாட்டிப்புட்டாங்க............. }}

----------
வாடிவாசல்
சி.சு.செல்லப்பா
காலச்சுவடு பதிப்பகம்
ரூ. 70

Sunday, January 25, 2015

மகாராஜாவின் ரயில் வண்டி : அ.முத்துலிங்கம்



மொழிப்பெயர்ப்பு கதைகளையும், பேட்டிகளையும் படித்திருந்தாலும், ரயில் வண்டியின் மேல் நீண்டநாட்களாக ஒரு கண் இருந்தது. காலச்சுவடில் முத்துலிங்கத்தின் மூன்று புத்தகங்கள் இருந்தாலும் ஆசையோடு எடுத்தது மகாராஜாவின் ரயில் வண்டியை. எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்றால் பெருமூச்சையே பதிலாக கொடுக்கலாம்.

புத்தக தலைப்பில் ஆரம்பித்து மொத்தம் இருபது சிறுகதைகள். ”லாஜிகல் எண்ட்” என்ற வார்த்தை அ.முத்துலிங்கம் அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கும் போல, பாதியில் ஆரம்பித்து படக்கென்று முடியும் கதைகள். ஒரு மென்சோகம் அனைத்து கதைகளிலுமே இழையோடுகிறது. கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் அகாலத்தில் கொடூர கனவுகாண்கிறார்கள், அவர்களின் கனவுலகமும் நிஜவுலகமும் இருவேறு எல்லைகளை கொண்டபடியே இருக்கிறது.

”டே லைட்” சேவிங் முடிவுற்றதனலால் ஏற்பட்ட நேரமாறுதலை கிரகித்துக்கொள்ள தவறியதால் வயதானவர் ஒருவர் கிரீன் கார்டுக்கான நேர்காணலுக்கு தாமதமாக செல்ல நேரிடுகிறது. கடிகாரத்தின் முட்களை ஒரு மனித்தியாலங்கள் முன்னோக்கி நகர்த்திக்கொள்ள வேண்டும் என்ற விசயத்தை தன் மகனும், மருமகளும் தனக்கு சொல்ல மறந்ததையும், அக்கணத்தில் அமெரிக்க அரசாங்கம் உள்ளிட்ட உலகமே தனக்கு எதிராக செயல்படுவதாகவும் கற்பனை செய்துகொள்ளும் கதாபாத்திரம் “கடன்” சிறுகதையில்.

தட்டுமுட்டுச்சாமான்களுடன் அன்புக்காக ஏங்கியபடி நிலவறையில் நித்திரையின்றி புரண்டுகொண்டிருக்கும் முதியவர். “திங்கள்" ,"செவ்வாய்" என எழுதப்பட்ட சாப்பாட்டு பொட்டலங்கள் புதன்கிழமையன்றும் பிரிஜ்ஜில் தங்கியிருப்பதை வைத்தே அப்பாவின் இறப்பை தெரிந்துகொள்ளும் மகன்.
தொகுப்பில் ஆகச்சிறந்த சிறுகதையாக எனக்கு பட்டது “கடன்”.

மதிப்பில் குறைவான 5 சென்ட் நாணயம் 10 சென்ட் நாணயத்தைவிட அளவில் பெரியதாக இருப்பதை பற்றி வெகுநேரம் சிந்திக்கிறார் ( ஆமா, என்ன மாதிரியான டிசைன் இது???).

"கொம்புளானா” : எந்த இடத்தில் “ல” போடவேண்டும் எங்கே “ள” போட வேண்டுமென்று விளக்குவதை வைத்து கதை தொடங்குகிறது. ”இங்கிலீஷ் விங்கிலீஷ்” ஸ்ரீதேவியை கொண்டிருக்கிறது “கொம்புளானா” கதையில் வரும் பத்மாவதி பாத்திரம்.

”மாரியோ ங்கோமா” என்ற அமெரிக்கர் ஸ்பெயின் தூதரகத்தின் வேலைக்கான நேர்காணலை ராகுகாலம் காரணமாக தவிர்த்துவிடுகிறார், ஏன் என்பதற்கான பதில் “ராகுகாலம்” கதையில். ”எப்படி நம்மவீட்டு ஆளுங்க என்னென்னக்கி எப்போ ராகுகாலம்னு கரெக்டா ஞாபகம் வச்சிருக்காங்க” அப்படிங்கிற அங்கலாய்ப்பை கதையில் சொல்லப்பட்டிருக்கும் ஷார்ட் கட் மூலம் சரிசெய்துகொள்ளலாம்.

நாளை வழங்கப்பட இருக்கும் சூப்பில் கட்டாயம் இறைச்சி இருக்கும் என்று அனுதினமும் நினைத்தபடி அகதிகள் முகாமில் தூங்கச்செல்லும் இரு சிறுவர்களைப்பற்றிய கதை “நாளை”.

மீதமுள்ள கதைகள் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை.

"மகாராஜாவின் ரயில் வண்டி" : வேறு எக்ஸ்பிரஸ்கள் கிடைக்காதபோது ஏறிக்கொள்ளலாம்.

----------------------

மகாராஜாவின் ரயில் வண்டி
அ.முத்துலிங்கம்
காலச்சுவடு பதிப்பகம்
ரூ. 125

Friday, January 23, 2015

அப்பம் வடை தயிர்சாதம் : பாலகுமாரன்



புரோகிதத்தில் ஆரம்பித்த ஒரு தலைமுறை, ஓட்டல் நடத்தி, வணிகம் செய்து ஐந்தாம் தலைமுறை வாரிசுக்கு அமெரிக்க மருத்துவமனையில் வேலை நியமனம் கையில் கிடைக்கிறது. தம் முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் பொருட்டு குடும்ப சகிதமாய் தஞ்சை ஜில்லாவிற்க்கு பயணிக்கிறார்கள். ஐந்தாம் தலைமுறை வாரிசு திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணும் உடன் பயணிக்கிறார். நான்காம் தலைமுறை பாட்டி ஒருவர் "எங்க பரம்பரை எப்பேர்பட்டது தெரியுமாக்கும்" என்று வீட்டுக்கு மாட்டுப்பொண்ணாய் வரப்போகும் பெண்ணிடம் விவரிப்பதாய் நகர்கிறது கதை.

புத்தகம் முழுவதும் விவரணை,விவரணை,விவரணை. கதையில் சொல்லப்படும் பல இடங்கள் நேரில் பரிச்சயமான இடங்களாதலால் படிக்கும்போதே ஒரு தனி ஈர்ப்பு.

இப்புதகத்தை படிக்கையில் மாயவரம் ஜங்ஷனில் உக்கார்ந்து கொண்டு இன்னொருமுறை படிக்கவேண்டும் என்று தோன்றவைத்தது பா.ரா.வின் சமீபத்திய கட்டுரை ஒன்று (எந்தெந்த புத்தகத்தை எந்தெந்த சூழ்நிலையில் படிக்கவேண்டுமென்று எழுதியிருப்பார்).

சுதேசி காலத்திலிருந்து செல்பிக்கு முன்பான காலகட்டங்களை தொட்டுச்செல்கிறது கதை.

"எவ்வளவு உயரம் சென்றாலும் பழசை மறக்கக்கூடாது". கதையின் சாரம்சம் இதுதான். பாலகுமாரன் அவர்கள் இதனை கதையின்வழி நம்மனக்கண்ணில் காட்சிபடுத்துகிறார்.

எங்களுக்கு பிறக்கப்போகும் பிள்ளைக்கும் "அப்பம்,வடை,தயிர்சாதம்"ன்னு மாயவரம் ஜங்ஷனில் கூவி விற்ப்பதற்க்கு நீங்க தான் சொல்லித்தரணும்" ஆறாம் தலைமுறைக்காக வைக்கப்படும் கண்ணீர் வேண்டுகோளுடன் முடிவடைகிறது கதை (படிக்கும் நம் கண்களிலும் கண்ணீர்த்துளிகள் நிச்சயம்).

இதை எழுதும் சமயம் திரு.பாலகுமாரன் அவர்கள் சுவாசப்பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு இருக்குறார்,அவர் பூரண நலம்பெற நம்முடைய பிரார்த்தனைகள்.

------------

அப்பம் வடை தயிர்சாதம்
பாலகுமாரன்
விசா பப்ளிகேஷன்
ரூ 160.

நெடுஞ்சாலை : கண்மணி குணசேகரன்.




2011 வருடத்தில் தேடி அலைந்து, டிஸ்கவரி வேடியப்பனிடம் பார்க்கிறபோதெல்லாம் "தல எப்படியாவது உசார் பண்ணுங்க" என்று சொல்லிவைத்து. க‌டைசியில் அவ‌ரும் கைவிரிக்க‌ அவ்வருட புத்த கண்காட்சியில் தமிழினி ஸ்டாலில் விசாரிக்க, "ஒரே ஒரு காப்பி இருக்கு சார், இருங்க எடுத்து தரேன்" என்று மேஜைக்கடியில் குனிந்தவர்,என்னைப்பார்த்தவாறு எழும்போதே எனக்கு நிலவரம் தெரிந்துவிட்டது.

"கடல்லியே இல்லியாம்" என்று சொல்லப்பட, கடைசி சான்ஸாக கண்மணி குணசேகரனிடமே தொலைபேசியில் விசாரிக்க "அத்த ஏ கேக்குரீங்க தம்பி,எங்கிட்ட மிச்ச இருந்ததே மூணு காப்பி, அதயுங்கொண்டுபோயி விஷ்ணுபுர இலக்கிய வட்டத்து சந்திப்புல காலிபண்ணிட்டு வண்டேன், ரெண்டாம் பதிப்பு போடறாங்க,சீக்கிர வந்திரும், வாங்கிக்கிங்க..." என்று தேடலுக்கு தற்காலிக முற்றுப்பபுள்ளி வைத்தார், இருவருடங்கள் கழித்து இப்போது கையில் கிடைத்திருக்கிறது. மூணரை வருஷமா பட்டியலில முதலிடத்தில் இருந்தது போனவாரம் தான் நீக்கம் செய்யப்பட்டது.... சரி, விசயத்துக்கு வருவோம்...

தமிழரசன்,ஏழைமுத்து,அய்யனார். ஒப்பந்த பணியாளர்களாக விருத்தாசலம் பெரியார் போக்குவரத்து கழக பணிமனையில் வேலைக்குசேரும் இம்மூவரின் பார்வையில் விவரிக்கப்பட்டு இருக்கிறது நாவல். வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து வந்து சேர்ந்திருந்தாலும் காலப்போக்கில் அவர்களிடையே உருவாகும் நேசம், அவரவர்தம் வாழ்க்கையில் நடந்த/நடக்கும் சம்பவங்கள் என நம்மை நாவலினுள் விரைவாக இட்டுச்செல்கிறது குணசேகரனின் எழுத்து.

சியெல்லாக பணிமனைக்குள் நடத்துனர்,ஓட்டுனர்,தொழில்நுட்ப பணியாளராக அடியெடுத்து வைக்கும் தமிழரசன்,ஏழைமுத்து,அய்யனார் எப்படி ஆரம்பத்தில் தலைகால் புரியாமல் அல்லாடுகிறார்களோ அதேபோல் பணிமனையின் வேலை சார்ந்த பயன்பாட்டு சொற்கள் நமக்கும் புரியவில்லை.
பக்கங்கள் செல்லச்செல்ல "யாருப்பா இன்னக்கி நைட்டு ஷிப்டு டெக்னிகலு,23ல கட்டு ஒடஞ்சிருக்குன்னு லாக் சீட்டுல எழுதி வச்சிட்டு போயிருக்காரு டிரைவரு, காலைல 4.40க்கு செட் அவுட்டு, அதுகுள்ளார மாத்திவுட்டுடுங்க" படிக்கும் நாமே ஏயினுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவோம.

ஒப்பந்த தொழிலாளர்களாய் இருக்கும் அவர்கள் மூவரும் படும் அவஸ்தைகளை ( தமிழினி "பாடுகளை" என்று எழுதிவைத்திருக்கிறது, புத்தகத அறிமுதத்தில் ) நம் கண்கொண்டு பார்க்கும்படியான எழுத்து நடை.

குணசேகரன் தான் ஒரு தொழிநுட்ப பணியாளராய் பணிபுரிவதால் விவரணைகளை மிக நுட்பமாக கையாண்டிடுக்கிறார்.

லைசன்ஸை திரும்ப பெற்றுச்செல்ல பணிமனைக்கு வரும் தமிழரசனும்,ஏழைமுத்தும் எதிர்பாராவிதமாக டூட்டி கொடுக்கப்படுவதும், கோணங்குப்பத்திலுருந்து சென்னைக்கு ஸ்பெஷல் வண்டியாக திருப்பிவிடப்படும்போதும், காயலான்கடைக்கு (கண்மணியின் எழுத்தில் "டவுன் கன்வர்சனுக்கு"காக வந்த, புஷ் ஸ்டார்ட் பொசிஷனில் உள்ள) செல்ல வேண்டிய வண்டியை குலசாமியை வேண்டிக்கொண்டே ஏழை உருட்டிசெல்லும் போதும் நம்மனதும் சேர்ந்து பயணிக்கிறது.
சென்னை பயணவழியில் வரும் மிலிட்டரி மேன் மற்றும் அவரது மகள் பாத்திரங்கள் கதையில் அவ்வளவாக ஒட்டவில்லை.

பஸ் விருத்தாசலம் டூ கோணாங்குப்பம் டூ சென்னை வந்திருச்சே, போறவழியில "வான்ட் ஆப் டீசல்" ல நின்னுட போகுதே என்னும் பதைபதைப்பு ஏழை, தமிழோடு சேர்த்து நமக்கும் வருகிறது.

கூட்டாளிகள் இருவருக்காக பணிமனையில் பதட்டத்தோடு காத்திருக்கும் அய்யனார், ரியர் ஜாய்ண்டோடு 0064 வண்டியை தேடி சென்னை ரோட்டில் சென்று சந்திப்பதாக கதைமுடிகிறது.

சியெல் வேலை இன்னும் சில நாட்களில் நின்றுவிடும்.வாழ்க்கை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையோடு பழுதாகி நின்றுகொண்டிருக்கும் 0064 நோக்கி செல்கிறார்கள் மூவரும். நீண்டு கிடக்கும் கருப்பு ரிப்பனாய் "நெடுஞ்சாலை".


சமீகமாக படித்தவற்றில் "ஆகா முடிந்துவிட்டதே" என்று ஏங்க வைத்த நாவல். குணசேகரன் அவர்களை கண்டிப்பாக அழைத்து பேச வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------

‍‍‍‍‍புத்தக விபரம்:
நெடுஞ்சாலை
தமிழினி பதிப்பகம்
ரூ. 290.

Wednesday, January 14, 2015

"காகிதப் படகில் சாகசப் பயணம்" - புத்தகத்தைப் பற்றி....


தன்னுடைய இருபத்தைந்தாண்டுகால வாழ்கையோட்டத்தில் ஒரு பத்திரிக்கையாளராக தான் பெற்ற அனுவங்களையும், இடையில் வேறு பாதைகளில் பயணித்தபோது கிடைத்தவற்றையும் தொகுத்தளித்திருக்கிறார்.

ஒரு முழுமையான தொகுப்பாக இல்லாமல் போனதில் சற்று ஏமாற்றமே. தான் நினைத்தவற்றையெல்லாம் ஒரு சுயசரிதை போல எழுத நினைத்தும் சில பல சாயங்கள் வெளுத்துப்போகும் அபாயத்தினால் தவிர்த்துவிட்டதாக பதிவுசெய்திருக்கிறார்.

எழுதி வெளியிட்டபின் சுஜாதாவிடம் தான் கேட்க நினைத்த, கேட்டதும் கிடைத்த உணர்வு போல (கருணாவின் வார்த்தைகளில் "மனதை அறுத்துக்கொண்டிருந்த முள் கழன்று காலுக்கு கீழே விழுந்ததாய்") கண்டிப்பாய் ஏற்பட்டிருக்கும், குறிப்பாக நக்கீரன் கோபால் விசயத்தில்.

பெட்டிக்கடைகளின் மெல்லிய இரும்பு கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கும் வார இதழ்களை இழுத்து த‌மதாக்கிக்கொள்ளும் வாசக மனநிலையிலிருந்து பார்க்கையில் வெள்ளை காகிதம், புத்தகமாய் மாறி வாசகர்கள் கையில் கிடைக்கும்வரை இடம்பெரும் உழைப்புகள்,துரத்தல்கள்,கவலைகள்,துரோகங்கள்,பரிணாமங்கள் தெரியவருகின்றன.

ஆரம்ப கட்டுரைகள் கொடுக்கும் உற்சாகம் கடைசி மூன்றில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

************************************************

புத்தகத்தில் பிடித்த‌ வ‌ரிக‌ள் :

"காத்திருக்க‌ காத்திருக்க‌தானே க‌ரித்துண்டு வைர‌மாகிற‌து." - கருணாகரன்.

"இந்த‌ உல‌க‌த்தில் நீ ம‌ட்டுந்தான் ந‌ல்ல‌வ‌ன்.உன்னை எல்லாரும் தூக்கிவ‌ச்சி கொஞ்ச‌னும்னு எதிர்பார்க்காதே, நாம‌ ந‌டந்துபோற பாதை முழுக்க‌ ரோஜா இத‌ழ்களாலேயே அமைஞ்சிருக்கும் என்று நினைக்காதே, அதில் முட்க‌ளும் இருக்கும்.முட்க‌ளை ந‌சுக்கி ரோஜாவில் ந‌ட‌ந்தால் அவ‌ன் ச‌த்ரிய‌ன். முட்க‌ளை ஒதுக்கி ரோஜாவில் ந‌ட‌ந்தால் அவ‌ன் சாண‌க்கிய‌ன். முள்ளுக்கு ப‌ய‌ந்து ந‌ட‌ப்ப‌தையே நிறுத்திவிட்டால் அவ‌ன் கோழை." ‍‍ - சுதாங்க‌ன்.

************************************************

ஒரு சாமானியனாக‌ ப‌த்திரிக்கையுல‌கில் நுழைந்து த‌கிடுதித்த‌ங்க‌ளையும், த‌ந்திர‌ங்க‌ளையும் ச‌மாளித்து ப‌ய‌ணப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் க‌ருணாக‌ர‌னுக்கு ந‌ம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

************************************************

புத்தக விபரம் :

காகிதப் படகில் சாகசப் பயணம்

பெ.கருணாகரன்

குன்றம் பதிப்பகம்

விலை : ரூ 150.