தன்னுடைய இருபத்தைந்தாண்டுகால வாழ்கையோட்டத்தில் ஒரு பத்திரிக்கையாளராக தான் பெற்ற அனுவங்களையும், இடையில் வேறு பாதைகளில் பயணித்தபோது கிடைத்தவற்றையும் தொகுத்தளித்திருக்கிறார்.
ஒரு முழுமையான தொகுப்பாக இல்லாமல் போனதில் சற்று ஏமாற்றமே. தான் நினைத்தவற்றையெல்லாம் ஒரு சுயசரிதை போல எழுத நினைத்தும் சில பல சாயங்கள் வெளுத்துப்போகும் அபாயத்தினால் தவிர்த்துவிட்டதாக பதிவுசெய்திருக்கிறார்.
எழுதி வெளியிட்டபின் சுஜாதாவிடம் தான் கேட்க நினைத்த, கேட்டதும் கிடைத்த உணர்வு போல (கருணாவின் வார்த்தைகளில் "மனதை அறுத்துக்கொண்டிருந்த முள் கழன்று காலுக்கு கீழே விழுந்ததாய்") கண்டிப்பாய் ஏற்பட்டிருக்கும், குறிப்பாக நக்கீரன் கோபால் விசயத்தில்.
பெட்டிக்கடைகளின் மெல்லிய இரும்பு கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கும் வார இதழ்களை இழுத்து தமதாக்கிக்கொள்ளும் வாசக மனநிலையிலிருந்து பார்க்கையில் வெள்ளை காகிதம், புத்தகமாய் மாறி வாசகர்கள் கையில் கிடைக்கும்வரை இடம்பெரும் உழைப்புகள்,துரத்தல்கள்,கவலைகள்,துரோகங்கள்,பரிணாமங்கள் தெரியவருகின்றன.
ஆரம்ப கட்டுரைகள் கொடுக்கும் உற்சாகம் கடைசி மூன்றில் இல்லை என்றே சொல்லவேண்டும்.
************************************************
புத்தகத்தில் பிடித்த வரிகள் :
"காத்திருக்க காத்திருக்கதானே கரித்துண்டு வைரமாகிறது." - கருணாகரன்.
"இந்த உலகத்தில் நீ மட்டுந்தான் நல்லவன்.உன்னை எல்லாரும் தூக்கிவச்சி கொஞ்சனும்னு எதிர்பார்க்காதே, நாம நடந்துபோற பாதை முழுக்க ரோஜா இதழ்களாலேயே அமைஞ்சிருக்கும் என்று நினைக்காதே, அதில் முட்களும் இருக்கும்.முட்களை நசுக்கி ரோஜாவில் நடந்தால் அவன் சத்ரியன். முட்களை ஒதுக்கி ரோஜாவில் நடந்தால் அவன் சாணக்கியன். முள்ளுக்கு பயந்து நடப்பதையே நிறுத்திவிட்டால் அவன் கோழை." - சுதாங்கன்.
************************************************
ஒரு சாமானியனாக பத்திரிக்கையுலகில் நுழைந்து தகிடுதித்தங்களையும், தந்திரங்களையும் சமாளித்து பயணப்பட்டுக்கொண்டிருக்கும் கருணாகரனுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
************************************************
புத்தக விபரம் :
காகிதப் படகில் சாகசப் பயணம்
பெ.கருணாகரன்
குன்றம் பதிப்பகம்
விலை : ரூ 150.
0 comments:
Post a Comment